பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய திறமையான இளைஞர்களுக்கு உதவும் வகையில், டி.எம்.பி. அறக்கட்டளை மற்றும் சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமி இணைந்து 30 தகுதியான தேர்வர்களுக்கு இலவச டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 சிறப்புப் பயிற்சியை வழங்க உள்ளன.
போட்டித் தேர்வுகளுக்குத் தரமான பயிற்சியும் முறையான வழிகாட்டுதலும் வழங்கும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்கான தகுதியான தேர்வர்கள் முறையான தேர்வு நடைமுறைகள் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
கடந்த ஆண்டும் இவ்விரு அமைப்புகளும் இணைந்து செயல்பட்ட திட்டத்தின் கீழ், குரூப்-1 முதன்மைத் தேர்வுக்கு 30 பேருக்கும், நேர்முகத் தேர்வுக்கு 30 பேருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் 12 பேர் வெற்றி பெற்று தற்போது அரசுப் பணிகளில் இணைந்துள்ளனர். இந்த வெற்றியைத் தொடர்ந்து நடப்பு ஆண்டிலும் இத்திட்டம் தொடர்கிறது.
இத்திட்டத்திற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் கடிதத்தை, டி.எம்.பி. அறக்கட்டளையின் நிர்வாகத் தலைவர் கே. அனந்த சுப்பிரமணியன், சுரேஷ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் டி. சுகேஷ் சாமுவேலிடம் வழங்கினார்.
பொருளாதார நெருக்கடி காரணமாகப் பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியாத கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்குக் கல்விச் சமத்துவத்தையும் சமூக முன்னேற்றத்தையும் அளிக்கும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


