தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான போதைக்கு எதிரான விழிப்புணர்வு மின்னொளி வாலிபால் போட்டி, நடைபெற்றது.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நகரில் உள்ள 4 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ அணிகள் பங்கேற்று விளையாடினார்கள். முன்னதாக, காவல் உதவி ஆய்வாளர் சிவக்குமார் வரவேற்புரையாற்றினார். காவல் ஆய்வாளர் வேல்ராஜ் தலைமை தாங்கி போட்டியைத் தொடங்கி வைத்தார். லீக் முறையில் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முடிவில் செயின்ட் சேவியர்ஸ் மேல்நிலைப்பள்ளி வெற்றி பெற்றது.
லசால் மேல்நிலைப்பள்ளி இரண்டாமிடம், கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி மூன்றாமிடம், செயின்ட் தாமஸ் மேல்நிலைப்பள்ளி நான்காமிடம் பிடித்தன. பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்குச் சிறப்பு விருந்தினராகத் தூத்துக்குடி டவுன் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற அணிகளுக்கு வடபாகம் காவல் நிலையம் சார்பில் கோப்பைகளையும் சான்றிதழ்களையும் வழங்கிப் பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர்கள் பாலமுருகன், பாஸ்கரன், சுணை முருகன், உதவி ஆய்வாளர்கள் சிவக்குமார், நிவேதா, தூத்துக்குடி வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜவகர், செயலாளர் ராஜா, வழக்கறிஞர் சின்னத்தம்பி, அகில இந்தியக் கைப்பந்து கழக வீரர் ஜெயபால், ஆசிரியர் பெனிட்டன் உட்படத் திரளானோர் கலந்துகொண்டனர்.


