தூத்துக்குடி மாநகராட்சியில் வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகள் தொடர்பாக ஆணையர் சி.ப்ரியங்கா தலைமையில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு – 2027-க்கான வீட்டுப் பட்டியல் கணக்கெடுப்புப் பணிகள் தொடர்பாக, முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான சி.ப்ரியங்கா தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகங்களுக்குட்பட்ட 85 மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். கணக்கெடுப்புப் பணியின் போது ‘HLO App’ செயலியில் தகவல்களைப் பதிவேற்றம் செய்வதில் ஏற்படும் சந்தேகங்கள் மற்றும் களத்தில் பணியாளர்களுக்கு எழும் நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில் விரிவான ஆலோசனைகளும் விளக்கங்களும் வழங்கி வழிகாட்டப்பட்டன.
ஆய்வுக் கூட்டத்தின் நிறைவில் மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா பேசுகையில்: “மக்களின் நலனுக்காக மேற்கொள்ளப்படும் இந்தத் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். வீடுகளுக்கு வரும் களப்பணியாளர்களிடம் பொதுமக்கள் அனைவரும் தங்களது உண்மையான தகவல்களை வழங்கி, நாட்டின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் துணையாக இருக்க வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இக்கூட்டத்தில் அனைத்து மண்டல மக்கள் தொகை கணக்கெடுப்புப் பொறுப்பு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


