நெல்லை எலும்பு மற்றும் மூட்டு மருத்துவர்கள் சங்கம் சார்பில், தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளியில் “வளர்ந்து நிமிர்ந்த இந்தியா” என்ற தலைப்பில் மாணவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் பள்ளி மாணவர்களின் உணவுப் பழக்கவழக்கங்கள், எலும்புகளின் வளர்ச்சி மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதோடு, அனைத்து மாணவர்களுக்கும் மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.
நிகழ்ச்சிக்குப் பள்ளியின் தாளாளர் வழக்கறிஞர் சுவர்ணலதா தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் மாரியப்பன் வரவேற்புரையாற்றினார். தமிழன்டா இயக்கம் மற்றும் கலைக்குழுத் தலைவர் ஜெகஜீவன் முன்னிலை வகித்தார்.
முகாமில் லட்சுமி பாலி கிளினிக் மருத்துவர் டாக்டர் மாரிமுத்து மற்றும் டாக்டர் பாலக்கண்ணன் ஆகியோர் கலந்துகொண்டு, மாணவர்களுக்குச் சத்தான உணவின் அவசியம், எலும்புகள் வலிமையடையத் தேவையான ஊட்டச்சத்துகள், உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக டாக்டர் மாரிமுத்து தலைமையில், மாணவர்களின் உடல் மற்றும் எலும்பு வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் இதுபோன்ற மருத்துவப் பரிசோதனைகளும் உணவுமுறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. 174 ஆண்டுகள் மிக நீண்ட பாரம்பரியம் மிக்க கல்வி நிறுவனமாகத் தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப் பள்ளி விளங்கி வருவது குறிப்பிடத்தக்கது.


