தென்பழனி என்று அழைக்கப்படும் புகழ்பெற்ற கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரை கோவிலில் ஆடி மாத பௌர்ணமி விழாவை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஆடி பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6 மணிக்குத் திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணிக்குச் சுவாமி கழுகாசலமூர்த்திக்குச் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடத்தப்பட்டன. மதியம் 12 மணிக்கு உச்சி கால பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மாலை 6 மணியளவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வருகை தந்த ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வதற்காகக் கோவில் முன்பு குவிந்தனர். கோவில் பௌர்ணமி கிரிவலக் குழுத் தலைவர் மாரியப்பன் கிரிவலத்தைத் தொடங்கி வைத்தார். கோவில் முன்பிருந்து புறப்பட்ட பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா” என்ற கோஷத்துடன் மலையைச் சுற்றி கிரிவலம் வந்தனர். இரவு வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தொடர்ந்து கிரிவலம் சென்று வழிபட்டனர்.
இரவு 7 மணிக்குச் சுவாமிக்குச் சிறப்பு வழிபாடும் தீபாராதனையும் நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


