ஆதிச்சநல்லூரில் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள தொல்லியல் அருங்காட்சியகத்தை முறையாகப் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சைட் மியூசியம் (Site Museum)
தாமிரபரணி கரையோரத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் பறம்புப் பகுதியில் மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வுப் பணிகள் நடந்தன. அங்குப் பண்டைய தமிழர்கள் பயன்படுத்திய முதுமக்கள் தாழிகள் உள்பட பல்வேறு அரிய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தப் பொருட்களைக் காட்சிப்படுத்தும் வகையில் ‘சைட் மியூசியம்’ (கள அருங்காட்சியகம்) அமைக்கப்பட்டது.
இந்த சைட் மியூசியத்தைக் கடந்த 2023-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். நாட்டிலேயே முதலாவது சைட் மியூசியம் இது என்ற பெருமையைப் பெற்றது. இந்த மியூசியத்தைப் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்து வருகின்றனர்.
இதற்கிடையில், திறந்து 5-வது மாதத்தில் வந்த வெள்ளத்தில் இந்த சைட் மியூசியம் பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ‘சி’ சைட்டில் (C Site) அமைக்கப்பட்டிருந்த தற்காலிகக் கூரையும் பழுதடைந்தது. இதனால் இங்குப் பொருள்களைப் பாதுகாப்பாக வைக்க முடியாத நிலையில், இந்தப் பொருள்கள் திருச்சி மண்டல அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டன.
அதோடு மட்டுமல்லாமல், தற்போது இந்த மியூசியத்திற்குப் பல்வேறு நிதியை மத்திய அமைச்சகம் வழங்கியுள்ளது. இதனால் ஊர்மக்கள் இலவசமாக மியூசியத்திற்கு வழங்கிய இடத்தில் முன்வேலி அமைத்தல், ‘சி’ சைட்டில் நிரந்தரக் கூரை (Shed) அமைத்தல் போன்ற பணிகளுக்குத் திருச்சி மண்டல இயக்குநர் அறவாழி அடிக்கல் நாட்டினார். இதற்கான பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இதற்கிடையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், இவ்விடத்தைக் கலாச்சாரச் சுற்றுலா மையமாக மத்திய அரசு அறிவித்து, அந்தப் பணிக்காகவும் நிதி ஒதுக்கீடு செய்தது. இதனால் ஆதிச்சநல்லூர் ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
பணியாளர்கள் நீக்கம்
ஆனாலும், திடீர் அதிர்ச்சி தரும் சம்பவம் ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தில் நடந்துள்ளது. இங்கு அகழாய்வுப் பணிகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், சைட் மியூசியத்தைப் பராமரிப்பதற்காகவும், இரவு பாதுகாப்புப் பணிக்காகவும் 6 தற்காலிகப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். அத்துடன் தினமும் 2 நிரந்தரக் களப்பணியாளர்கள் காலை முதல் மாலை வரை மியூசியத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தற்காலிகப் பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதனால் சைட் மியூசியத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள செடிகள், மரக்கன்றுகள் பராமரிப்பின்றி கருகி வருகின்றன.
பாதுகாப்பற்ற நிலை
களப்பணியாளர்கள் 2 பேர் மட்டும் தினமும் காலை 10 மணிக்கு மியூசியத்திற்கு வருகின்றனர். இங்கு வரும் மாணவ-மாணவியர் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு மியூசியத்தைச் சுற்றிக் காண்பிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். மாலை 5 மணிக்கு மியூசியத்தைப் பூட்டிவிட்டுச் சென்றுவிடுகின்றனர். இரவு நேரத்தில் மியூசியம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது.
இது பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் யாரேனும் மியூசியத்திற்குள் புகுந்து, அகழாய்வில் கிடைத்த அரிய பொருட்களைச் சேதப்படுத்தவோ அல்லது திருடிச் செல்லவோ வாய்ப்புள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
பொதுமக்கள் கோரிக்கை
எனவே, இங்கு மீண்டும் அகழாய்வுப் பணியை மேற்கொள்வதுடன், முறையாகப் பராமரிக்கவும், இரவு நேரத்தில் பாதுகாப்புப் பணியில் ஆட்களை நியமிக்கவும் சம்பந்தப்பட்ட மத்திய தொல்லியல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவின் முதல் சைட் மியூசியத்தைக் கண்டுகொள்ளாத மத்திய அரசு
இந்தியாவிலேயே முதன்முதலில் 1876-ல் ஆய்வு நடந்த இடம் ஆதிச்சநல்லூர். இந்த இடத்தில் கிடைத்த பொருள்கள் ஜெர்மனி நாட்டில் பெர்லின் நகரில் உள்ளன. அதுபோலவே 1902-ல் அகழாய்வு செய்யப்பட்ட பொருள்கள் லண்டன் மற்றும் சென்னையில் உள்ளன. 2004-ல் அகழாய்வு செய்யப்பட்ட பொருள்கள் சென்னைத் தலைமைச் செயலக அருங்காட்சியகத்தில் உள்ளன. 2022-ல் அகழாய்வு செய்யப்பட்ட பொருள்கள் திருச்சி மண்டல அலுவலகத்தில் உள்ளன.
இதற்கிடையில் மாநில அரசு அகழாய்வு செய்த பொருள்களைத் திருநெல்வேலியில் ‘பொருநை அருங்காட்சியகம்’ எனப் பிரமாண்டமாகக் காட்சிப்படுத்திவிட்டார்கள். ஆனால், உலகம் முழுவதும் உள்ள பொருள்களைக் கொண்டு வந்து ஆதிச்சநல்லூரில் காட்சிப்படுத்துவோம் என்று கூறிய மத்திய அரசு, உருவாக்கிய இந்தியாவின் முதல் சைட் மியூசியத்தையே அழிய விட்டுவிட்டது.
தொடர்ந்து நடைபெறும் பணி, அறிவிப்போடு நிற்கிறது. ஆரம்பிக்கும் பணியும் ஆமை வேகத்தில் நடக்கிறது. இதற்குக் காரணம் ஆதிச்சநல்லூர் மீது மத்திய அரசு ஆர்வம் காட்டாமல் இருக்கும் நிலையாகும். எனவே, இந்த அலட்சியப் போக்கை மத்திய அரசு கைவிட்டு, உடனே ஆதிச்சநல்லூர் சைட் மியூசியத்தினை மேம்படுத்தி, உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமும், சுற்றுலா கலாச்சார மையமும் அமைக்க ஆவன செய்ய வேண்டும்.


