தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்கான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாகப் பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
முதல்கட்டமாக நடக்கும் ‘வீடு பட்டியல் கணக்கெடுப்பு’க்கான சுய ஆன்லைன் பதிவிற்குப் பொதுமக்கள் se.census.gov.in என்ற பிரத்யேக இணையதளம் வாயிலாகத் தங்கள் வீடு சார்ந்த 33 கேள்விகளுக்குப் பதிலளித்துத் சுயமாகப் பதிவு செய்யலாம்.
அவ்வாறு பதிவு செய்யும்போது கிடைக்கும் 11 இலக்க அடையாள எண்ணை, ஆகஸ்ட் 1 முதல் 30-ஆம் தேதி வரை வரும் களப்பணியாளர்களிடம் வழங்கினால் போதுமானது. இக் தகவல்கள் அடங்கிய விழிப்புணர்வு நோட்டீஸ்களையும் பேரணியில் மாணவர்கள் விநியோகித்தனர்.
கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு போன்ற சமூக நலத் திட்டங்களைத் திட்டமிட மக்கள் தொகை கணக்கெடுப்பு மிக அவசியம் என்பதை உணர்த்தும் இப் பேரணியைப் பள்ளி உதவித் தலைமையாசிரியர் கோமா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளைத் தலைமையாசிரியர் தட்சிணாமூர்த்தி, நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணிய சுபாஷ் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.


