கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரெனத் தீப்பிடித்து எரிந்ததில், அருகில் நின்ற மற்றொரு இருசக்கர வாகனமும் தீக்கிரையாகிப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு மினி பேருந்துகள் நிற்கும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மின்சார மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வாகனம் எதிர்பாராத விதமாகத் திடீரெனத் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
சிறிது நேரத்திற்குள் தீ வண்டி முழுவதும் பயங்கரமாகப் பரவி எரியத் தொடங்கியதால், பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்கள் அலறியடித்துக்கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது, தீயின் தாக்கம் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு சாதாரண மோட்டார் சைக்கிளுக்கும் பரவி, அதுவும் எரியத் தொடங்கியது.
இவ்விபத்து குறித்துக் கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு உடனடியாகத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பீய்ச்சி அடித்துத் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இருப்பினும், அதற்குள் மின்சார மோட்டார் சைக்கிள் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மற்றொரு மோட்டார் சைக்கிளில் பற்றி எரிந்த தீயை வீரர்கள் விரைந்து அணைத்ததால், அதன் சில பகுதிகள் மட்டுமே சேதமடைந்து பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இந்தத் தீ விபத்து காரணமாகப் பேருந்து நிலையப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கடும் பதற்றமும் பரபரப்பும் நிலவியது.
இச்சம்பவம் குறித்துக் கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின்சார பைக் பேட்டரி வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


