குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனித்திருவிழாவில் நாராயணர் சுவாமி, பாமா, ருக்மணி அம்பாள்களுடன் பொன்சப்பரத்தில் வீதிஉலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோவில் ஆனி கொடை விழா விஸ்வரூப தரிசனம் மற்றும் அலங்கார பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டுத் தாமிரபரணி ஆற்றில் நீராடிய பக்தர்கள், கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தும் மாவிளக்கு, ஆயிரங்கண் பானை மற்றும் உடல் நலன் வேண்டி மரத்தாலான உடல் உறுப்புகளைச் செலுத்தியும் நேர்த்திக்கடன் வழிபாடு மேற்கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக அதிகாலை 1 மணிக்கு ஆனித் திருவிழா சிறப்புப் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து, உற்சவர் நாராயணர் சுவாமி பாமா மற்றும் ருக்மணி அம்பாள்களுடன் அலங்கரிக்கப்பட்ட பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அங்கிருந்து முக்கிய வீதிகள் வழியாக வீதிஉலா சென்று காலை 7 மணிக்குச் சன்னதி தெரு வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தார். அங்குச் சுவாமி மற்றும் அம்பாள்களுக்குச் சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனைகள் நடத்தப்பட்டன.
இவ்விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருகிற ஜூலை 21 ஆம் தேதி தீர்த்தவாரி நிகழ்வு நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளைக் குரங்கணி 60 பங்கு நாடார்கள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பொதுமக்கள் மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்புப் பணிகளுக்காகச் ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) செல்வராஜ் தலைமையில் 200 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


