திருநெல்வேலி மாவட்டத்தில் பாயும் தாமிரபரணி ஆற்றின் படித்துறைகள் மற்றும் மண்டபங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கான சடங்குகள் மற்றும் பரிகார வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிகழ்வுகளின் போது பயன்படுத்தப்படும் ஆடைகள், துணிகள், செருப்புகள், இறந்தவர்களின் உடைமைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஆற்றில் வீசப்படுவதால், இலட்சக்கணக்கான மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் தாமிரபரணி ஆறு மாசடைந்து, நீர்வாழ் உயிரினங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
தாமிரபரணி ஆற்றின் தூய்மையைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், ஆற்றிலும் அதன் கரையோரங்களிலும் பிளாஸ்டிக் மற்றும் கழிவுப் பொருட்களை கொட்டுபவர்கள், ஆற்றில் துணிகள் மற்றும் பிற பொருட்களை வீசுபவர்கள் மீது அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும், சில இடங்களில் முன்னோர்களுக்கான சடங்குகள் மற்றும் பரிகாரங்களை மேற்கொள்ளும் போது ஆடைகள், துணிகள், செருப்புகள் மற்றும் பிற பொருட்களை ஆற்றில் வீசும் நடைமுறை தொடர்ந்து காணப்படுகிறது. இதனைத் தடுக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை, தாமிரபரணி ஆற்றின் மாசுபாட்டைத் தடுக்க தேவையான விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
மேலும், “மதத்தின் பெயரால் நீர்நிலைகளை மாசுபடுத்த யாருக்கும் உரிமை இல்லை” என்று சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, தாமிரபரணி ஆற்றில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான மதச் சடங்குகள் மற்றும் பொருட்களை ஆற்றில் வீசும் நடைமுறைகளுக்கு தடை விதிப்பது குறித்து மாவட்ட நிர்வாகம் பரிசீலனை செய்து வருகிறது.
எனவே, இந்நேர்வு தொடர்பாக பொதுமக்கள், தன்னார்வலர்கள், சமூக அமைப்புகள், மத அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் 16.07.2026 அன்று சமர்ப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.


