
உங்கள் முதல் நாள் பள்ளி நினைவிருக்கிறதா? எப்படிச் சென்றோம்? மகிழ்ச்சியாகவா? அல்லது செல்ல மாட்டேன் என்று அடம்பிடித்தோமா? சற்றுப் பின்னோக்கிப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கும் தானே? அத்தோடு இன்றைய குழந்தைகளின் மனநிலையையும் கவனித்தல் ஆரோக்கியமான வாழ்வியல் பயணத்தை அது உணர்த்திச் செல்லும்.
பள்ளிகளில் குழந்தைகள் சேர்ப்பு பெரும்பாலும் கல்வியாண்டின் முதல் மாதமான ஜூன் மாதம் முழுவதும் நடைபெறும். இந்நிலையில் மற்ற மாணாக்கர்கள் மேல் வகுப்பிற்குச் செல்வதால் அது சார்ந்த உற்சாக மனநிலையில் இருப்பர். புதிய வகுப்பறை, புதிய நண்பர்கள், புதிய ஆசிரியர்கள் என்று மிகவும் மகிழ்ச்சியாகக் காணப்படுவர். ஆனால், முதல் முறையாகப் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் மனநிலை பெரும்பாலும் கவலையானதாகவே இருக்கும்.
பெற்றோரை விட்டுப் பிரிந்து வேறொரு உலகினுள் காலடி எடுத்து வைக்கும் அந்த முதல் தருணம் அவர்களுக்குக் குழப்பம், தனிமை, புரிதலற்ற மனநிலை போன்றவற்றை உருவாக்கும். அது அவர்கள் எதிர்கொள்ளும் முதல் சமூகப் பிரிவு அனுபவம் இதுவே என்பதால் அச்சமும் இயல்பாகவே தோன்றுகிறது. இப்போதெல்லாம் மூன்று வயதைத் தொட்டதுமே பள்ளி என்னும் புதிய சமூகத்தினுள் குழந்தைகள் கட்டாயமாக விடப்படுகின்றனர். தங்களது வீடு, பெற்றோர், உறவினர்கள் என்ற பாதுகாப்பு வட்டத்திலிருந்து திடீரென வெளியேறிப் புதிய சூழலை எதிர்கொள்வது எளிதானதல்ல. எனவே, தங்களுக்கான இடத்தை அந்தப் புதிய சூழலில் கண்டடையும் வரை மிகுந்த வருத்தத்தோடும் தயக்கத்தோடும் பள்ளிக்கு வருகின்றனர்.
பிரிவு அச்சம்
******
குழந்தை பள்ளிக்குச் செல்லும்போது அழுவது பல பெற்றோருக்குக் கவலையை ஏற்படுத்துகிறது. ஆனால், உளவியலாளர்கள் இதனை “பிரிவு அச்சம்” (Separation Anxiety) என்று குறிப்பிடுகின்றனர். தன்னைத் பாதுகாக்கும் நபரிடமிருந்து பிரியும்போது குழந்தை காட்டும் இயல்பான எதிர்வினை இது. எனவே, குழந்தை அழுவதை ஒரு குறையாகக் கருதாமல், புதிய சூழலோடு பழகுவதற்கான இயல்பான பயணமாகவே பெற்றோர்களும் ஆசிரியர்களும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு குழந்தை பிறந்தவுடன் அழுகைச் சத்தத்தைக் கேட்க அனைவரும் விரும்புவதைப் போலத்தான் இதுவும்.
சமூகத் தொடர்பு
********
பள்ளியில் தங்களுக்கு அறிமுகமில்லாத மற்ற குழந்தைகளுடனும் ஆசிரியர்களுடனும் பழகுவது அவர்களுக்கு எளிதல்ல. ஆரம்பத்தில் ஒருவித குழப்பமும், பெற்றோரால் பள்ளிக்குள் தள்ளப்பட்ட ஒரு உணர்வும் அவர்களிடம் உருவாகிறது. சில குழந்தைகள் அழுகின்றனர்; சிலர் அமைதியாக அடக்கிக்கொண்டு ஒரு மூலையில் அமர்ந்து விடுகின்றனர்; சிலர் கோபத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்துகின்றனர். இவை அனைத்தும் குழந்தைகளின் இயல்பான உளவியல் எதிர்வினைகளே தவிர ஒழுக்கக்குறைவின் அறிகுறிகள் அல்ல.
குழந்தை உளவியலாளர்கள் கூறுவதன்படி, வாழ்க்கையின் முதல் ஐந்து ஆண்டுகளில் குழந்தைகளின் உணர்ச்சிப் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. பள்ளி என்ற இடம் அவர்களுக்குக் கற்றலுக்கான இடமாக மட்டுமல்ல; பாதுகாப்பு உணர்வை வழங்கும் இரண்டாவது இல்லமாகவும் மாற வேண்டும். அந்த நம்பிக்கை உருவாகிய பின்னரே கற்றல் இயல்பாக நடைபெறும். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வது கற்றுக்கொள்ள மட்டுமல்ல; பெற்றோரைத் தவிர வேறு உலகங்களையும் மனிதர்களையும் நம்பக் கற்றுக்கொள்வதற்கும் தானே…
### ஆசிரியர்கள்
நிறைய குழந்தைகளை ஒரே நேரத்தில் கையாள வேண்டிய சூழலில் ஆசிரியர்களும் பல சவால்களை எதிர்கொள்கின்றனர். உடல் மற்றும் மனரீதியாகப் பாதிக்கப்படுகின்றனர் என்பது உண்மை. குழந்தைகள் ஒவ்வொருவரும் தனித்தனி குடும்பச் சூழலிலிருந்து வரும் உயிர்கள். அவர்களைக் கையாளுவதும் சரியாக வழிநடத்துவதும் அறிவுப்பூர்வமான மற்றும் மிக நுட்பமான செயலாகும். எனவே, குழந்தை மனவியல் (Child psychology) கற்றுத் தேர்ந்த ஆசிரியர்களை மட்டுமே மழலையர் பயிலும் வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்.
‘சிறு குழந்தைகள் தானே, அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க அதிகப் படிப்பு அவசியமா?’ என்ற எண்ணத்தில் செயல்பட்டால் குழந்தைகள் மிக மோசமான விதத்தில் பாதிக்கப்படுவர். இத்தகைய நிலைப்பாட்டினைக் கடைப்பிடிக்காத பள்ளிகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது அரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறையின் தலையாய கடமையாகும். குழந்தைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறும்போது, அவர்களை ஒழுங்குபடுத்த வெளிப்படுத்தப்படும் போலியான கோபங்களும் அதட்டல்களும் கூட குழந்தைகளால் மிகவும் அச்சுறுத்தலாக உணரப்படலாம்.
இதனிடையே ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பாடத்திட்டங்களைக் கற்பித்தாக வேண்டும் என்ற பொறுப்பும் ஆசிரியர்களுக்கு இருக்கிறது. இருப்பினும் முதல் சில வாரங்களில் குழந்தைகளின் உணர்ச்சி நிலையைப் புரிந்துகொள்வதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
பள்ளியின் முதல் சில நாட்களில் ஆசிரியரின் புன்னகையும் கனிவான குரலும் குழந்தைக்குப் பாதுகாப்பு உணர்வை உருவாக்குகின்றன.
குழந்தையின் நினைவில் முதலில் பதியும் பாடம் அன்புதான்; அதன் பிறகே எழுத்துகளும் எண்களும் வருகின்றன. ஆசிரியர் குழந்தையின் பெயரை நினைவில் வைத்து அழைப்பதும், சிறிய முயற்சிகளைக் கூடப் பாராட்டுவதும், அவர்களுடன் தரையில் அமர்ந்து பேசுவதும் நம்பிக்கையை உருவாக்கும் சிறந்த வழிகளாகும்.
குழந்தைகள் முதலில் விளையாட்டின் வழியாகவே உலகத்தைப் புரிந்துகொள்கின்றனர். அதுவே அப்பருவத்தினரின் இயல்பு. நண்பர்களைப் பெறுவதும், பகிர்ந்துகொள்வதும், காத்திருப்பதும், விதிகளைப் பின்பற்றுவதும் எல்லாம் விளையாட்டின் வழியேதான் கற்றுக்கொள்ளப்படுகின்றன. எனவே, ஆரம்ப நாட்களில் பாடங்களைவிட விளையாட்டிற்கு அதிக இடம் வழங்குவது குழந்தையின் மனநலத்திற்கு உதவுகிறது.
பெற்றோரின் எதிர்பார்ப்பு
************
முதல் நாள் பள்ளிக்கு வரும் குழந்தையிடம் “இன்று என்ன கற்றாய்?” என்று கேட்பதை விட “இன்று மகிழ்ச்சியாக இருந்தாயா?” என்று கேட்பதே முக்கியம். ஏனெனில் அந்தக் குழந்தைக்கு அன்றைய நாள் எழுத்துகளையும் எண்களையும் விடப் புதிய மனிதர்களையும் புதிய சூழலையும் புரிந்துகொள்வதிலேயே அதிக ஆற்றல் செலவாகியிருக்கும். பெற்றோர்களும் குழந்தைகளைச் சிறந்த பள்ளியில் சேர்த்துவிட்டால் தங்களது கடமை முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. குழந்தை பள்ளிக்குச் செல்ல விரும்புகிறதா? ஆசிரியருடன் இயல்பாகப் பழகுகிறதா? நண்பர்களுடன் கலந்து விளையாடுகிறதா? மகிழ்ச்சியாக இருக்கிறதா? என்பதையும் தொடர்ந்து கவனிக்க வேண்டும்.
மூன்று வயதிலேயே அதிகமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற அவசரத்தை விட, குழந்தையின் மன வளர்ச்சிக்கும் சமூகத் திறன்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறதா என்பதையே முதலில் பார்க்க வேண்டும். குழந்தைகளை மற்ற குழந்தைகளோடு ஒப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். “அடுத்த வீட்டுக் குழந்தை அழவில்லை, நீ மட்டும் ஏன் அழுகிறாய்?” போன்ற வார்த்தைகள் அவர்களின் தன்னம்பிக்கையைப் பாதிக்கக்கூடும்.
ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமான வேகத்தில் புதிய சூழலை ஏற்றுக்கொள்கிறது என்பதைப் பெற்றோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மேலும் குழந்தையைப் பள்ளியில் விட்டுவிட்டுச் செல்லும்போது பெற்றோர்களே அதிகப் பதற்றத்துடன் காணப்பட்டால் அந்த உணர்வு குழந்தைக்குள்ளும் பரவுகிறது. எனவே, பெற்றோர்கள் நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் குழந்தையை வழியனுப்புவது அவசியம். சில நேரங்களில் குழந்தையை விடப் பெற்றோருக்கே அதிக ஆறுதல் தேவைப்படுவது உண்டு.
அன்பான அடித்தளம்
**********
ஆரம்ப நாட்களில் தொடர்ந்து பயமுறுத்தப்படுவதோ அல்லது அவமானப்படுத்தப்படுவதோ நடந்தால், சில குழந்தைகளுக்குப் பள்ளி என்ற சொல்லே எதிர்மறையான உணர்வை ஏற்படுத்தலாம். அதே நேரத்தில் அன்பான அனுபவங்கள் கிடைத்தால் பள்ளி அவர்களுக்கு மகிழ்ச்சியின் இடமாக மாறும். எனவே, முதல் சில மாதங்கள் குழந்தைகளின் எதிர்காலக் கல்வி வாழ்க்கைக்கான அடித்தள காலகட்டமாகக் கருதப்பட வேண்டும்.
மகுடம் சூட்டல்
******
ஆசிரியர் மையக் கல்வி நிலை இருந்தபோது ஒன்றாம் வகுப்பில் சேர வரும் மாணவர்கள் ஆசிரியருக்குத் தட்சணையாக வெற்றிலை, பாக்கு, பழங்கள் வழங்கி முதல் நாளைக் கொண்டாடினர். இன்று குழந்தை மையக் கல்வி முறையில் குழந்தைகள் பள்ளிக்குள் வரும்போது அவர்களுக்கு அலங்கரிக்கப்பட்ட கிரீடம் சூட்டி, இனிப்புகளும் சிறிய பரிசுப் பொருட்களும் வழங்கி வரவேற்கப்படுகின்றனர். அரசு தொடக்கப் பள்ளிகளில் இதனைக் கட்டாயமாக்கியிருப்பது கல்வித்துறையின் பாராட்டத்தக்க முயற்சியாகும்.
உண்மையில் பள்ளியின் முதல் நாள் என்பது ஒரு வகுப்பறையின் கதவு திறக்கப்படும் நாள் மட்டுமல்ல; ஒரு குழந்தையின் சமூக வாழ்க்கை தொடங்கும் நாள். அந்த நாளை மகிழ்ச்சியாக மாற்றித் தருவது பெற்றோர், ஆசிரியர் மற்றும் சமூகத்தின் கூட்டுப்பொறுப்பாகும்.
முதல் நாளில் குழந்தையின் கண்களில் தெரியும் கண்ணீரை விட, சில நாட்களுக்குப் பிறகு அதே கண்களில் மலரும் நம்பிக்கையும் புன்னகையுமே கல்வியின் முதல் வெற்றியாகும்.
_


