தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி சார்பில் தருவைகுளம் கடற்கரையில் தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் நீர்வளச் சூழலியல் மேலாண்மைத் துறை, கடற்சார் உயிரின வளர்ப்பு ஆராய்ச்சி பண்ணை வசதி மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் ஆகியவை இணைந்து தருவைகுளம் கடற்கரையில் தூய்மைப் பணி மற்றும் விழிப்புணர்வு முகாமினை இன்று நடத்தின.
மீன்வளக் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் 42 இளங்கலை மாணவ, மாணவிகள் இணைந்து தருவைகுளம் கடற்கரையில் இருந்த ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிகள், பழைய மீன்பிடி வலைகள் மற்றும் பிளாஸ்டிக் குடுவைகளைச் சேகரித்துத் தூத்துக்குடி மாநகராட்சி தூய்மைப் பணி வாகனத்திடம் முறைப்படி ஒப்படைத்தனர். கடற்கரையில் இருந்த முட்செடிகள் ஜேசிபி எந்திரம் மூலம் அகற்றப்பட்டன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்திப் பண்ணை வளாகத்தில் 10 புதிய மரக்கன்றுகள் நடப்பட்டன. முன்னதாகப் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்தனர்.
தருவைகுளம் பண்ணை வளாகத்தில் உள்ளூர் மீனவர்களுக்காக “கடல் மாசுபாட்டைத் தடுத்தல்” என்ற தலைப்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கடல் மாசுபாடு, மீன்வளப் பாதுகாப்பு மற்றும் நுண்நெகிழிகளால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்துப் பேராசிரியர்கள் விரிவுரையாற்றி, விழிப்புணர்வுத் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்


