ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று 4வது நாளாக நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான 1435-ஆம் பசலி ஆண்டிற்க்கான வருவாய் தீர்வாய கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) இன்று (05.06.2026) நான்காவது நாளாக அனைத்து வட்டங்களிலும் சம்பந்தப்பட்ட வருவாய்த் தீர்வாய அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இதில் வருவாய் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
இன்றையதினம் எரல் வட்டம், பெருங்குளம் உள்வட்டத்திற்குட்பட்ட மங்கலக்குறிச்சி, பெருங்குளம், நட்டாத்தி, திருப்பணிசெட்டிக்குளம், சாயர்புரம், இருவப்பபுரம் பகுதி 1, இருவப்பபுரம் பகுதி 2 ஆகிய கிராமங்களைச் சார்ந்த பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 120 மனுக்களை பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்கள்.
மேலும், பெறப்பட்ட மனுக்களை ஆராய்ந்து அதன்மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதற்கு சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அவர்கள் அறிவுறுத்தினார். மேலும், இதுவரை மொத்தம் 309 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மேலும், ஜமாபந்தியில் பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடி தீர்வாக இன்றையதினம் 08 பயனாளிகளுக்கு என இதுவரை மொத்தம் 19 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாக்களை வருவாய் தீர்வாய அலுவலர் / மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கியுள்ளார்.
இந்நிகழ்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், அலுவலக மேலாளர் (பொது) ரகு, ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார் மற்றும் வருவாய் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.


