தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் பெ.மதன் ராஜா ஆகியோர் தலைமையில் அனைத்து அரசுத் துறைகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்கள், 10 வட்டங்கள், 12 ஊராட்சி ஒன்றியங்கள், 3 நகராட்சிகள், 18 பேரூராட்சிகள் மற்றும் 403 கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் செயல்பட்டு வரும் வருவாய், பேரிடர் மேலாண்மை, ஊரக வளர்ச்சி, பள்ளிக்கல்வி, மருத்துவம், வேளாண்மை, நெடுஞ்சாலைகள் மற்றும் மின்பகிர்மானக் கழகம் உள்ளிட்ட முக்கிய துறைகளின் திட்ட முன்னேற்றங்கள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் பேசியதாவது: “தமிழ்நாடு முதலமைச்சரின் ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில், மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய அனைத்து மக்களுக்கும் அரசுத் திட்டங்கள் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அரசு அலுவலகங்களைத் தேடி வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும். மேலும், நிலுவையில் உள்ள அனைத்து நலத்திட்டப் பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மீன்வளத்துறை இயக்குநர் விஜய கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், மாவட்ட எஸ்பி அபிஷேக் குப்தா, சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), ஜி.வி.மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), கு.சரவணன் (திருவைகுண்டம்), க.கருணாநிதி (கோவில்பட்டி), கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) இரா.ஐஸ்வர்யா, மாநகராட்சி ஆணையர் சி.ப்ரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் மூ.குருச்சந்திரன், கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷு மங்கள் மற்றும் அனைத்துத் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


