தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் வைகாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற நவதிருப்பதி தலங்களில் 9-ஆவது தலமாகவும், நம்மாழ்வார் அவதாரம் செய்த திருத்தலமாகவும் ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோயில் விளங்குகிறது. இக்கோயிலின் வைகாசி திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் 5-ஆம் திருவிழாவை முன்னிட்டு கடந்த 25ஆம் தேதி நவதிருப்பதி கோயில்களில் உள்ள 9 பெருமாள்களுக்கும், ஆதிநாதர் ஆழ்வார் கோயிலில் வைத்து மங்களாசாசனம் நடைபெற்றது. அன்று நள்ளிரவு 12 மணிக்கு நவதிருப்பதி பெருமாள்களின் புகழ்பெற்ற கருட சேவை விமரிசையாக நடந்தது. திருவிழா நாட்களில் தினமும் காலையும், மாலையும் சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் வீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 9-ஆம் நாள் தேர்த்திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன: அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம். அதிகாலை 4:15 மணிக்கு திருமஞ்சனம். அதிகாலை 4:45 மணிக்கு தீபாராதனை. காலை 5:30 மணிக்கு நித்தியல் கோஷ்டி ,காலை 7:15 மணிக்கு சுவாமி நம்மாழ்வார் தேரில் எழுந்தருளினார். இதனைத் தொடர்ந்து காலை 8:00 மணிக்கு திருத்தேரில் எழுந்தருளிய நம்மாழ்வாருக்கு மகா தீபாராதனை நடைபெற்றது.
அதன்பின்னர், நான்குனேரி வானமாமலை ஜீயர் சுவாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை முறைப்படி தொடங்கி வைத்தார். கூடியிருந்த திரளான பக்தர்கள் “கோவிந்தா… கோவிந்தா…” என முழக்கமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் மேலரத வீதியில் இருந்து புறப்பட்டு வடக்கு ரதவீதி, கீழரத வீதி, தெற்கு ரதவீதி வழியாக வலம் வந்து காலை 10:30 மணிக்கு மீண்டும் மேல ரதவீதியில் உள்ள நிலையைச் சென்றடைந்தது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


