தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் வழங்கப்படும் அனைத்துச் சேவைகளும் முற்றிலும் இலவசமானவை என்றும், பொதுமக்கள் யாரும் இடைத்தரகர்களையோ அல்லது போலி விளம்பரங்களையோ நம்பிப் பணத்தைக் கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் எச்சரித்துள்ளார்.
இது குறித்து ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் வேலைவாய்ப்புப் பதிவு, பதிவு புதுப்பித்தல் (Renewal), வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை, கூடுதல் தகுதிப் பதிவு, முகவரி மாற்றம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இணையதளத்தின் வாயிலாக எவ்விதக் கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், மனுதாரர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தே இந்தச் சேவைகளைப் பெறும் வகையில், அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnvelaivaaippu.gov.in வழியாக ஆன்லைனிலேயே தங்களது பதிவுகளை நேரடியாகச் செய்து கொள்ளும் எளிய வசதிகளும் தற்பொழுது தடையின்றிச் செய்து தரப்பட்டுள்ளன.
எனவே, வேலைவாய்ப்புத் துறையின் இச்சேவைகளைப் பெறப் பொதுமக்கள் மற்றும் வேலைதேடும் இளைஞர்கள் எவரும், சமூக வலைதளங்களில் வரும் போலி விளம்பரங்களையோ அல்லது மாவட்ட அலுவலகங்களைச் சுற்றி வரும் இடைத்தரகர்களையோ நம்பித் தங்களது தனிப்பட்ட விபரங்களையோ அல்லது பணத்தையோ கொடுத்து ஏமாற வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.


