தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள இராஜாபுதுக்குடி கிராமத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ வெயிலாட்சியம்மன் கோவில் கொடை விழா கடந்த மே 11-ஆம் தேதி பக்தி பரவசத்துடன் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
கொடியேற்ற விழாவைத் தொடர்ந்து தினசரி அம்மனுக்குப் பல்வேறு வகையான சிறப்பு அபிஷேகங்களும், கண்கவர் அலங்கார தீபாராதனைகளும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வந்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாளன்று அம்பாளுக்குச் சிறப்புப் பூஜைகளும், அதனைத் தொடர்ந்து மங்களகரமான கூட்டுப் பிரார்த்தனை திருவிளக்கு பூஜையும் நடைபெற்றது. பூஜையில் கிராமத்தைச் சேர்ந்த 71 பெண்கள் கலந்துகொண்டு விளக்குகள் ஏற்றி, அம்மன் பக்திப் பாடல்களைப் பாடி உருகிப் பிரார்த்தனை செய்தனர்.
பூஜை வழிபாடுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, விழாவில் கலந்துகொண்ட ஆன்மீகப் பெருமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் மங்களப் பிரசாதங்களும், அன்னதானமும் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் இராஜாபுதுக்குடி கிராமப் பக்தர்கள் இணைந்து செய்திருந்தனர்.


