கோவில்பட்டியில் மே 26ம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவை சார் ஆட்சியர் ஹுமான்சூ மங்கள் ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார்.
தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், கோவில்பட்டி ரோட்டரி சங்கம் மற்றும் ஜேசிஐ அமைப்பு ஆகியவை இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா, செண்பகவல்லி அம்மன் கோவில் பின்புறம் உள்ள விஷ்வா மீட்டிங் ஹாலில் நடைபெறுகிறது. கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹுமான்சூ மங்கள் ரிப்பன் வெட்டி கண்காட்சியினைத் திறந்து வைத்து, மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கினார்.
மே 15 முதல் மே 26 வரை, தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். நாவல்கள், வாழ்க்கை வரலாறு, மருத்துவம், இலக்கியம், குழந்தைகளுக்கான புத்தகங்கள், போட்டித் தேர்வு நூல்கள் என 10,000-க்கும் மேற்பட்ட தலைப்புகளில் புத்தகங்கள் உள்ளன. விற்பனையாகும் அனைத்து புத்தகங்களுக்கும் 10% சிறப்புத் தள்ளுபடி உண்டு.
நீங்கள் விரும்பும் ஓவியம் எனும் தலைப்பில் எல்.கே.ஜி முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஓவிய போட்டியும்,புத்தகம் என்ன செய்யும் எனும் தலைப்பில் கட்டுரை போட்டியும், திருக்குறள் எழுதும் போட்டியும் 6ம்வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நடைபெறும். இதில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகமும் பரிசாக வழங்கப்படும்.
ரூ 1,000 க்கு மேல் புத்தகம் வாங்குவோருக்கு வாசிப்பு செம்மல் சான்றிதழும், ரூ 2,000க்கு புத்தகம் வாங்குவோருக்கு வாசிப்பு சிகரம் சான்றிதழும் வழங்கப்படும்.புத்தக கண்காட்சிக்கு வருகை தரும் வாசகர்களில் குலுக்கல் முறையில் மூன்று நபரை தேர்வு செய்து புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும்.
புத்தகத் திருவிழா தொடக்க நிகழ்வுக்கு ஜே.சி.ஐ தலைவர் ரகுபதி தலைமை வகித்தார். ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர்கள் முத்து செல்வம், வி.எஸ்.பாபு,சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க தலைவர் ரவிவர்மா வரவேற்றார். ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஆசியா பார்ம்ஸ் பாபு, ரவி மாணிக்கம், கண்ணன், முத்து முருகன், நடராஜன், காளியப்பன், கனகசபாபதி ஜே.சி.ஐ நிர்வாகிகள் செல்வலட்சுமி, வர்ஷன், மீனா, வெங்கடேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்க செயலாளர் கார்த்திக் நன்றி கூறினார்.


