தூத்துக்குடியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சி. மாதன் உத்தரவின்படி, மாநகரப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும், பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையிலும் காவல்துறையினர் அதிரடி நடை ரோந்து (Foot Patrol) மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நேற்று தூத்துக்குடி நகர உட்கோட்டக் காவல் துணை கண்காணிப்பாளர் சுனில் நேரடி மேற்பார்வையில் தென்பாகம் மற்றும் மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் இணைந்து ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். தூத்துக்குடியின் முக்கிய வர்த்தகப் பகுதியான VVD சிக்னல் சந்திப்பில் தொடங்கி குரூஸ் பர்னாந்து சிலை சந்திப்பு வரை இந்த நடை ரோந்து நடைபெற்றது.
ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் பொதுமக்களுடனும், வணிகர்களுடனும் நேரடியாகக் கலந்துரையாடினர். அப்போது பின்வரும் அறிவுரைகள் வழங்கப்பட்டன. பொதுமக்களின் பாதுகாப்புத் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் நேரடியாகக் கேட்டு அறிந்தனர்.
குற்றச் சம்பவங்களைக் கண்காணிக்கவும், தடுக்கவும் கடைகள் மற்றும் வீடுகளில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்த வலியுறுத்தப்பட்டது. தகவல் பரிமாற்றம்: ஏதேனும் சந்தேகத்திற்கிடமான நபர்களோ அல்லது அசம்பாவிதச் சம்பவங்களோ நடந்தால், உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
குற்றவாளிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதோடு, பொதுமக்களுக்குக் காவல்துறையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இத்தகைய நடை ரோந்துப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


