கோவில்பட்டி ஸ்ரீராம்நகர் பகுதியில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து சுமார் 1,000-க்கும் நெருக்கமான மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோவில்பட்டி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மேற்பார்வையில், ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் போலீசார் ஸ்ரீராம்நகர் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இருளப்பசாமி (52) 2. மணிகண்டன் (50) மனோஜ் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரும் கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும், சட்டவிரோத லாபத்திற்காக மதுபாட்டில்களைப் பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து அவர்கள் மூவரையும் கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 994 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, இவ்வளவு அதிகமான மதுபாட்டில்கள் அவர்களுக்கு எப்படி கிடைத்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


