திருச்செந்தூர் அருகே பிரபல ரவுடி மரிய அந்தோணி போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட சம்பவம் குறித்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் விளக்கம் அளித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரவுடி மரிய அந்தோணியை எஸ்பி மதன் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, ரவுடி நடத்திய தாக்குதலில் காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபுவைச் சந்தித்து ஆறுதல் கூறிய அவர், மருத்துவர்களிடம் சிகிச்சை விவரங்களைக் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்பி மதன் தெரிவித்ததாவது: மரிய அந்தோணி மீது 2 கொலை வழக்குகள் உட்பட மொத்தம் 30 வழக்குகள் உள்ளன. கடந்த மாதம் தூத்துக்குடியில் வீடு ஒன்றில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் இவரைத் தேடி வந்தோம். சோனகன்விளை பகுதியில் பதுங்கியிருந்த இவரைச் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான தனிப்படை பிடிக்கச் சென்றபோது, மரிய அந்தோணி தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் போலீசாரை நோக்கிச் சுட்டார். மேலும் கத்தியாலும் தாக்கியுள்ளார்.
இதில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு காயமடைந்தார். தனது உயிரைப் பாதுகாத்துக் கொள்ளவும், குற்றவாளியைப் பிடிக்கவும் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் தனது துப்பாக்கியால் ஒரு முறை சுட்டார். இதில் மரிய அந்தோணியின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
காயமடைந்த இருவருக்கும் உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, தற்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருவரும் நலமுடன் இருப்பதாக எஸ்பி தெரிவித்தார். மேலும், ரவுடி மரிய அந்தோணிக்கு நாட்டுத் துப்பாக்கி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்துத் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


