தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக நிலவும் ஆவின் பால் தட்டுப்பாடு குறித்து போர்க்கால அடிப்படையில் ஆவின் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுவாக மூன்று வகையான ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்பட்டு வந்தன. ஆவின் பிரீமியம் (ஆரஞ்சு நிறம்): ஹோட்டல்கள் மற்றும் டீக்கடைகளுக்கு அதிக அளவில் விநியோகம் செய்யப்பட்டு வந்த இந்த வகை பால், சில மாதங்களுக்கு முன்பு ஆவின் நிர்வாகத்தால் முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது.
டிலைட் (ஊதா நிறம்) ஆரஞ்சு நிறப் பால் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது டிலைட் வகை பாலின் விநியோகமும் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. நைஸ் (நீல நிறம்): தற்போது மிகக் குறைந்த அளவிலேயே இந்தப் பால் புழக்கத்தில் உள்ளது.
மாவட்டத்தில் நாளொன்றுக்குக் குறைந்தபட்சம் 50,000 லிட்டருக்கு மேல் விநியோகம் செய்யப்பட்டு வந்த ஆவின் பால், தற்போது மிகக் கடுமையாகக் குறைக்கப்பட்டுள்ளது. பால் சப்ளை குறைந்ததால், பொதுமக்களுக்குத் தேவையான அளவு பாலை வழங்க முடியாமல் முகவர்கள் திணறி வருகின்றனர்.இரவு நேரங்களில் விற்பனை செய்வதற்குப் பால் இல்லாததால், பல ஆவின் பால் நிலையங்கள் முன்கூட்டியே மூடப்படும் அவல நிலை நீடிக்கிறது.
தனியார் பால் விலையை விட ஆவின் பால் குறைவாக இருப்பதால், பொதுமக்கள் இதனையே அதிகம் நாடுகின்றனர். ஆனால், தொடர்ந்து பால் விநியோகம் குறைக்கப்படுவதால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஆவின் நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு அனைத்து வகை ஆவின் பால் பாக்கெட்டுகளையும் பழையபடி முழு அளவில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.


