தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை திருவிழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமி மற்றும் அம்பாள் ரதவீதி உலா வரும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை தேரோட்டத் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியானது, தூத்துக்குடி விஸ்வகர்ம தர்ம பரிபாலன சங்கம் சார்பாக கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாகப் பாரம்பரியமாக நடத்தப்பட்டு வருகிறது.
9-ம் நாள் மண்டகப்படி விழாவையொட்டி, காலை 11 மணிக்கு சுவாமி, அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்குச் சிறப்பு அபிஷேகம், கும்பாபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து மாலை 6:00 மணிக்கு விநாயகர், முருகர், அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் மற்றும் அருள்மிகு ஸ்ரீ சங்கர ராமேஸ்வரர் ஆகியோருக்குச் சிறப்பு அலங்காரங்களுடன் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற ரதவீதி உலாவில் சுவாமி கைலாச பர்வத வாகனத்திலும், அம்பாள் கமல வாகனத்திலும் எழுந்தருளினர். பஞ்சமூர்த்திகளுடன் புறப்பட்ட இந்த ரதவீதி உலாவின் போது, கீழ ரதவீதியில் அலங்கரிக்கப்பட்ட தேருக்கு முன்பு ‘தேர் கடாட்சம்’ நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி, அம்பாள் கீழ ரதவீதி, மேல ரதவீதி மற்றும் வடக்கு ரதவீதி வழியாக வலம் வந்து மீண்டும் கோவிலை அடைந்தனர்.
பூஜைக்கான ஏற்பாடுகளைக் கோவில் பிரதான பட்டர்கள் செல்வம் மற்றும் குமார் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, தூத்துக்குடி விஸ்வகர்ம தர்ம பரிபாலன சங்க தலைவர் சண்முக சங்கர், செயலாளர் சசிகுமார், பொருளாளர் கார்த்தி சன், துணைத்தலைவர் வெங்கடேசன், துணைச் செயலாளர் ராஜகோபால் மற்றும் கௌரவ ஆடிட்டர் முருகானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


