தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையமான அண்ணா பல்கலைக்கழக (தூத்துக்குடி வளாகம்) வ.உ.சி. அரசு பொறியியல் கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளைத் தேர்தல் பொதுப் பார்வையாளர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்.
மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான விசு மகாஜன் முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆய்வில், தேர்தல் பொதுப் பார்வையாளர்களான எலுச்சூரி ரத்னாகர ராவ் (விளாத்திகுளம் / தூத்துக்குடி), சோடிங்புயீ (திருச்செந்தூர் / திருவைகுண்டம்), அரவிந்த் குமார் வெர்மா (ஓட்டப்பிடாரம் / கோவில்பட்டி)
ஆகியோர் கலந்துகொண்டனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் ‘ஸ்ட்ராங் ரூம்’ (Strong Room) எனப்படும் பாதுகாப்பு அறைகள் மற்றும் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களின் செயல்பாடு குறித்து கேட்டறிந்தனர். வாக்கு எண்ணும் நாளன்று வேட்பாளர்களின் முகவர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்குத் தேவையான தடுப்புகள், இருக்கை வசதிகள் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் குறித்து ஆய்வு செய்தனர்.
மையத்தைச் சுற்றி அமைக்கப்படவுள்ள மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் கூடுதல் போலீசார் பாதுகாப்புப் பணி குறித்தும் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் இயந்திரங்களைப் பாதுகாப்பாகக் கொண்டு வருவது மற்றும் வாக்கு எண்ணிக்கையைத் தடையின்றி நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் துரிதப்படுத்தப் பார்வையாளர்கள் அறிவுறுத்தினர். இந்த ஆய்வின் போது தேர்தல் பிரிவு அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


