பிரசித்தி பெற்ற கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடைவரை கோவிலில், பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமான் – வள்ளி திருக்கல்யாண வைபவம் நேற்று இரவு மிக விமரிசையாக நடைபெற்றது.
இக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கடந்த மார்ச் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 31-ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 10-ஆம் நாள் திருவிழாவாக நேற்று முன்தினம் இரவு வேடுவர் சமுதாயம் சார்பில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சுவாமி, வள்ளி மற்றும் தெய்வானைக்குச் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் செய்யப்பட்டன.
நேற்று அதிகாலை 5 மணிக்குக் கோவில் நடை திறக்கப்பட்டு, திருவனந்தல் மற்றும் காலசந்தி பூஜைகள் நடைபெற்றன. காலை 7 மணியளவில் முருகப்பெருமானுக்குச் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு அலங்காரங்கள் செய்யப்பட்டன. மதியம் உச்சிகால பூஜையைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவின் உச்சகட்ட நிகழ்வாக, நேற்று இரவு 7 மணியளவில் முருகப்பெருமான், வள்ளி மற்றும் தெய்வானையுடன் மணக்கோலத்தில் திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். சரியாக இரவு 7:30 மணியளவில் வேத மந்திரங்கள் முழங்க, சுவாமி – வள்ளி திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மகா தீபாராதனைக்குப் பிறகு பக்தர்களுக்குத் திருக்கல்யாண விருந்து வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.


