தூத்துக்குடியில் நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் 2ஏ பணிகளுக்கான முதன்மைத் தேர்வை மொத்தம் 456 தேர்வர்கள் எழுதினர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 மற்றும் 2ஏ முதன்மைத் தேர்வுகள் கடந்த மாதம் 8-ஆம் தேதி நடைபெற்றன. அப்போது நிர்வாகக் காரணங்களால் பாதியிலேயே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாற்றுத் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, ரத்து செய்யப்பட்ட தேர்வுகள் நேற்று மீண்டும் நடைபெற்றன.
இந்தத் தேர்வை எழுதுவதற்காகத் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 487 பேருக்குத் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் வழங்கப்பட்டிருந்தன. தேர்வர்கள் வசதிக்காகத் தூத்துக்குடி புனித மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று நடைபெற்ற இந்த முதன்மைத் தேர்வு முற்பகல் மற்றும் பிற்பகல் என இரு வேளைகளிலும் நடைபெற்றது. இதில் மொத்தம் 456 தேர்வர்கள் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்; 31 பேர் தேர்வுக்கு வரவில்லை.
தேர்வு விதிமுறைகளின்படி, விண்ணப்பதாரர்கள் காலை 9 மணிக்கு முன்பாகவும், மதியம் 2 மணிக்கு முன்பாகவும் தேர்வு மையத்திற்கு வருகை தர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வந்தவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை.
தேர்வர்களின் வசதிக்காகத் தேர்வு மையத்திற்குச் செல்ல சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. தேர்வு மையத்தில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்கப் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.


