கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைச்சாமி நாடார் மாரியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ரோட்ராக்ட் கிளப் சார்பில் சர்வதேச ரோட்ராக்ட் தின விழா கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது.
சர்வதேச ரோட்டரி இயக்கத்தில் இளைஞர்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்தவும், 18 முதல் 30 வயது வரை உள்ள இளைஞர்களின் தலைமைத்துவ திறன்களை வளர்க்கவும், கடந்த 1968-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் முதல் ரோட்ராக்ட் கிளப் தொடங்கப்பட்டது. அந்த நாளை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 13-ஆம் தேதி சர்வதேச ரோட்ராக்ட் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது.
கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவிற்கு ரோட்ராக்ட் சேர்மன் அருண் தலைமை தாங்கினார். கல்லூரிச் செயலாளர் கண்ணன், ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார், செயலாளர் பழனி குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி ரோட்ராக்ட் தலைவர் ஹரிகரசுதன் அனைவரையும் வரவேற்றார்.
சர்வதேச ரோட்ராக்ட் தினத்தின் சேவைத் திட்டங்கள் குறித்து ரோட்டரி மாவட்ட முன்னாள் துணை ஆளுநர் பேராசிரியர் அருனேஷ் நோக்கவுரையாற்றினார். விழாவில் சென்னைவாழ் நாடார் சங்கத் தலைவர் தங்கமுத்து நாடார், துணைத் தலைவர் ரவீந்திரநாதன், சங்கச் செயலாளர் டாக்டர் ஆறுமுகச்சாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். அவர்கள் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
முன்னதாக, சமீபத்தில் காலமான ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநரும், இதயம் குழுமத்தின் தலைவருமான திரு. முத்து அவர்களின் மறைவையொட்டி, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. தொடர்ந்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த விழாவில் ரோட்ராக்ட் நிர்வாகிகள் தினேஷ்குமார், திவ்ய ஜோதி, காயத்ரி உள்ளிட்ட சங்க உறுப்பினர்கள் பலர் திரளாகக் கலந்துகொண்டனர். நிறைவாக, கல்லூரி ரோட்ராக்ட் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் விஜய கோபாலன் நன்றி கூறினார்.


