தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணி பகுதியில் கழிவுமீன் நிறுவனங்களை மூடக்கோரி 668-வது நாளாக போராட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி அருகேயுள்ள பொட்டலூரணி பகுதியில் உள்ள கழிவுமீன் நிறுவனங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை மூட வலியுறுத்தி கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் போராட்டங்களை நடத்தி வந்தனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தப் போராட்டம் அறவழியில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.
‘நாள்கூடிக்’ குழுமிப் போராடுதல், ‘மாதக் கூடல்’ ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் எனப் பல்வேறு வடிவங்களில் மக்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த மாதத்திற்கான ‘மாதக் கூடல்’ போராட்டம், போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சங்கரநாராயணன் தலைமையில் நடைபெற்றது. போராட்டக் குழுவின் பொறுப்பாளர்கள் இராதாகிருஷ்ணன், ஈஸ்டர் அந்தோணிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தலைமைப் பொறுப்பாளர் சண்முகம் வரவேற்புரையாற்றினார். வீரத்தமிழர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வைகுண்டமாரி, தமிழ்த் தேசியப் பேரவையின் பொறுப்பாளர் மணிமாறன், சமூக ஆர்வலர் பிரபா ஆகியோர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். நிகழ்வின் இறுதியில் பாலமுருகன் நன்றியுரை வழங்கினார். இதில் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.


