முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு
சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் 2025&26 ஆம் ஆண்டுக்கான சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருது வழங்கப்பட்டது. சமூக அடிப்படையிலான பாதுகாப்பு முயற்சிகள், வனவிலங்குகளைப் பாதுகாத்தல், பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான சுற்றுச்சூழல் நடைமுறைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் சிறந்த தலைமைத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் சிறந்த பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.
சமூக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைமைத்துவ விருது வழங்கும்பொருட்டு, மாநில அளவில் பெறப்பட்ட விண்ணப்பங்கள் மாநிலத் தேர்வுக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட வாரியாக விருது பெறுநர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக திருநெல்வேலி மண்டலத்தைச் சேர்ந்த தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு துறையில் சிறப்பாக செயல்பட்டதற்காக முத்தாலங்குறிச்சி காமராசு 2025 – 26 ஆம் ஆண்டிற்கான சமூக பாதுகாப்பு தலைமைத்துவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டார்.
இவ்விருதின் கீழ் ரூ.25,000 ரொக்கமாகவும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது. இந்த விருதை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா உடனிருந்தார்.
முத்தாலங்குறிச்சி காமராசு சுற்றுபுறச்சூழலை காப்பாற்ற கடந்த இரண்டு வருடகாலமாக மாவட்ட நிர்வாகத்தோடு பணியாற்றி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் புதர்மண்டி கிடந்த முள்செடிகளை அகற்றி கிராம உதயம் தொண்டு நிறுவனங்கள், எக்ஸ்னரோ விலையில்லா இயந்திரங்களை ஒருங்கிணைத்து வருகிறார். அந்தந்த பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள், வியாபாரி சங்கங்கள், மரம் வளர்க்கும் தன்னார்வலர்களை ஒன்றிணைத்து தாமிரபரணி நதிக்கரையில் மரங்களைநட்டு பராமரிக்க ஏற்பாடு செய்து வருகிறார். மரக்கன்றுகள், பனை விதைகள், விதைப்பந்துகளை மாணவர்கள் மூலம் விதைக்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், இவருடைய முன்னெடுப்பில் ஸ்ரீவைகுண்டம் முதல் ஆழ்வார்திருநகரி வரை உள்ள தாமிரபரணியை மாதிரி தாமிரபரணியாக மாற்றி செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


