தூத்துக்குடியில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பில் 3-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் நில அளவைத் துறையில் பணிபுரியும் அலுவலர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு (FERA) சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று 3-வது நாளாகக் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை மற்றும் நில அளவைத் துறைகளில் பணியாற்றும் அனைத்து நிலை அலுவலர்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாக்கவும், பணி நேரத்தில் தாக்குதல் நடத்தும் குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் ஏதுவாக “சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை” அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.
பணிச்சுமையைக் கருத்தில் கொண்டு, அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் மற்றும் தனி ஊதியம் வழங்கிட வேண்டும். கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்ட தலைவரும் வட்டாட்சியருமான சுவாமிநாதன் தலைமையில் 80 பெண்கள் உட்பட சுமார் 150-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாகச் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.


