தூத்துக்குடி அருகே தருவைகுளம் பகுதியில் போலீசார் நடத்திய அதிரடி வாகன சோதனையில், சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் பீடி இலைகள் மற்றும் சிகரெட் மூடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நேற்று இரவு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சமத்துவபுரம் சோதனைச் சாவடியில், தருவைகுளம் காவல் நிலைய போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடியில் இருந்து குளத்தூர் நோக்கி அதிவேகமாக வந்த 407 ஈச்சர் ரக வாகனம் ஒன்றை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால், ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் மின்னல் வேகத்தில் ஓட்டிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, ரோந்து பணியில் இருந்த தலைமை காவலர்கள் குருசாமி மற்றும் கணேஷ்குமார் ஆகியோர் தங்களது இருசக்கர வாகனத்தில் அந்த கடத்தல் வாகனத்தை விடாமல் துரத்தினர். சுமார் 10 கிலோமீட்டர் தூரம் விரட்டிச் சென்ற நிலையில், வேப்பலோடை அருகே சென்றபோது ஓட்டுநர் வாகனத்தை அங்கேயே நிறுத்திவிட்டு அருகில் இருந்த காட்டுப்பகுதிக்குள் தப்பி ஓடிவிட்டார்.
அந்த வாகனத்தைப் போலீசார் சோதனையிட்டபோது, அதில் சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட சுமார் 2,000 கிலோ எடை கொண்ட 38 மூட்டைகள் பீடி இலைகள் மற்றும் சுமார் 240 கிலோ எடை கொண்ட 08 மூட்டைகள் சிகரெட் பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டது. கைப்பற்றப்பட்ட இந்தப் பொருட்களின் மொத்த சந்தை மதிப்பு சுமார் 30 லட்சம் ரூபாய் ஆகும்.
பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் கடத்தல் பொருட்கள் தருவைகுளம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டன. தப்பியோடிய அடையாளம் தெரியாத ஓட்டுநர் யார்? இந்தப் பொருட்கள் எங்கிருந்து, எங்கு கடத்தப்பட்டன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


