தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் ஆட்சியர் தெரிவிக்கையில், “வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான அளவான 429.40 மி.மீ-க்கு பதிலாக 475.45 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இருப்பினும், ஜனவரி 2026-ல் இயல்பை விட மிகக் குறைவாக (2.06 மி.மீ) மழை பெய்துள்ளது.
அணைகளின் நிலை (18.02.2026 அன்று): பாபநாசம் அணை 90.55 அடியும், மணிமுத்தாறு 94.68 அடியும், சேர்வலாறு 83.63 அடியும் நீர் இருப்பு கொண்டுள்ளன.
வேளாண் சாகுபடி: 2025-26 ஆம் ஆண்டில் நெல் 14,412 ஹெக்டேர் பரப்பிலும், சிறுதானியங்கள் 93,058 ஹெக்டேர் பரப்பிலும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. சிறுதானியங்கள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை (79,345 ஹெக்) விட அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன.
நெல் கொள்முதல்: சேரகுளம் மற்றும் தோழப்பன்பண்ணை ஆகிய கிராமங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பயிர் காப்பீடு: 2025-26 ஆம் ஆண்டில் உளுந்து, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்காக 88,988 விவசாயிகள் காப்பீடு செய்துள்ளனர். சேமா காப்பீடு நிறுவனம் மூலம் சுமார் ரூ.37.06 கோடி இழப்பீடு விடுவிக்கப்பட்டுள்ளது.
நுண்ணீர் பாசனம்: வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத் துறைகளின் கீழ் 2025-26 ஆம் ஆண்டிற்கு முறையே ரூ.276.61 இலட்சம் மற்றும் ரூ.619 இலட்சம் மதிப்பிலான இலக்குகள் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இயந்திரமயமாக்கல்: சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள், சூரியசக்தி கூடார உலர்த்திகள் மற்றும் வேளாண் கருவிகள் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டுள்ளன.
விதைகள் மற்றும் உரங்கள்: வேளாண் விரிவாக்க மையங்களில் நெல், உளுந்து உள்ளிட்ட விதைகள் இருப்பு உள்ளன. மாவட்டத்தில் தற்போது 3,225 மெ.டன் யூரியா மற்றும் 1,898 மெ.டன் டி.ஏ.பி உள்ளிட்ட உரங்கள் இருப்பில் உள்ளன.
பயிர் கடன்: 01.04.2025 முதல் 16.02.2026 வரை 24,333 விவசாயிகளுக்கு ரூ.283.16 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில் 17,398 சிறு மற்றும் குறு விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். இந்தக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட வன அலுவலர் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்


