செய்துங்கநல்லூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளை தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்ய வந்தார். நெல்லையில் இருந்து தனி ரயிலில் அதிகாரிகளுடன் வந்த அவர் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார். அவர் ரயில் நிலைய நடைபாதை உயர்த்தும் பணி, நீட்டும் பணி, பயணிகள் ரயில் தண்டவாளத்தினை கடக்க மேம்பாலம் அமைக்கும் பணி, கழிவிடம், சுற்றுப்புறச்சுவர் உள்பட பணிகளை பார்வையிட்டார். அந்த சமயத்தில் செய்துங்கநல்லூர் உதவும் உள்ளங்கள் மக்கள் நலச்சங்கம் சார்பில் மேலாளரிடம் பாலக்காடு ரயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்ல வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாது.
திருநெல்வேலி திருச்செந்தூர் ரயில்பாதையில் அமைந்துள்ளது செய்துங்கநல்லூர் ரயில் நிலையம். இங்கிருந்து தினமும் 500க்கும் மேற்பட்டோர் வேலைகளுக்கும், மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கும் சென்று வருகின்றனர். செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தை மேம்படுத்தும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக உயர்மட்ட நடைமேடை, ரயில்வே தண்டவாள நடைபாதை நீளம் மற்றும் அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் ரயில் நிலையம் தகுதி மேம்பாடு அடைகிறது. இங்கு திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் உள்பட அனைத்து ரயில் களும் நின்று செல்கின்றன. ஆனால் பாலக்காடு எக்ஸ்பிரஸ் மட்டும் கொரானா காலத்துக்கு பிறகு நின்று செல்வதில்லை. இந்த ரயில் இங்கு நின்று செல்லவேண்டும் என கடந்த 2 வருட காலமாக பொதுமக்கள் மனுகொடுத்தும் போராடியும் வருகிறார். இதுவரை மூன்று மதுரை கோட்ட மேலாளர்களை நேரில் கண்டு அவர்களிடம் மனு கொடுத்துள்ளனர். அதோடு மட்டுமல்லாமல் கனிமொழி எம்.பி, முருகன் எம்.பி. நயினார் நாகேந்திரன் எம்.எல்,ஏ,ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ ஊர்வசி அமிர்த்த ராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் ஆகியோர் வழியாக மனுகொடுத்தும் அவர்களிடம் பரிந்துரை கடிதம் வாங்கி அனுப்பியுள்ளனர். ஆனால் இதுவரை பாலக்காடு எக்ஸ்பிரஸ் செய்துங்கநல்லூரில் நின்று செல்லவில்லை.
நெல்லை திருசெந்தூர் வழிதடத்தில் 11 ரயில் நிலையங்கள் உள்ளன. 9 ரயில் நிலையத்தில் ரயில் நின்று செல்கிறது. செய்துங்கநல்லூர், தாதன்குளத்தில் மட்டும் இந்த ரயில் நிற்பதில்லை. 2023 மழை வெள்ளத்தின் போது பயணிகளுக்கு உதவி புரிந்த மக்கள் ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம் மக்கள். இவர்கள் இருவருமே பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்றுசெல்ல வேண்டும் என்று மனுகொடுத்தனர். தாதன்குளம் மக்கள் ரயில்வே நிர்வாகம் மழை வெள்ளத்தில் பணிபுரிந்த மக்களுக்கு ரிவார்டாக 25 ஆயிரம் கொடுத்தார்கள். அந்த பணத்தினை கனிமொழி எம்.பி முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் லெட்சுமிபதி அவர்களிடம் கொடுத்துவிட்டு, எங்களுக்கு பணம் வேண்டாம் பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நின்றுசென்றால் போதும் என கூறிவிட்டனர். ஆனால் ஸ்ரீவைகுண்டத்தில் ரயிலை நிறுத்தினார்கள் . தாதன்குளம் மற்றும் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் பாலக்காடு ரயில் நின்று செல்லவில்லை. இதனால் தொடர்ந்து பொதுமக்கள்போராடி வந்தனர்.
செய்துங்கநல்லூர் ரயில் நிலையம் மேம்படுத்தும் இந்த நிலையில் பாலக்காடு எக்ஸ்பிரஸ் நின்று செல்லவேண்டும் என வலியுருத்தினர். இந்த மனுவைபெற்றுக்கொண்ட கோட்ட மேலாளர் கமர்சியல் பிரிவினரை கூப்பிட்டார், அந்த அலுவலர் இந்த ரயில் நிலையத்தில் வருமானமே இல்லை என்று கூறினார். இந்த வேளையில் அங்கு வந்த திருச்செந்தூர் பயணிகள் ரயிலில் சுமார் 100க்கு மேற்பட்ட பயணிகள் ஏறினார்கள். இதை எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கோட்ட மேலாளரிடம் நேரில் காட்டினார். இது போலவே தினமும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் இந்த ரயில் நிலையத்தில் வருமானம் ஈட்டி வருகிறது. தாங்கள் ரயிலை முதலில் நிறுத்துங்கள். வருமானம் இல்லையென்றால் நிறுத்தி விடுங்கள் என்று கூறினார்.
இதை விசாரித்த ரயில்வே கோட்ட மேலாளர் செய்துங்கநல்லூர் ரயில் நிலையத்தில் விரைவில் பாலக்காடு எக்ஸ்பிர¬ஸ் நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.
அதிகாரி வருமானம் இல்லை என்று கூறும் போது, ரயிலில் 100க்கு மேற்பட்ட பயணிகள் ஏற்றியதை கோட்ட மேலாளர் நேரில் பார்த்த காரணத்தினால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. நிச்சயம் பாலக்காடு எக்ஸ்பிரஸ் செய்துங்கநல்லூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்வார்கள் என நம்பிக்கை பிறந்துள்ளது. பொதுமக்கள் சார்பில் மனுகொடுக்கும் நிகழ்ச்சியில் எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, செய்துங்கநல்லூர் உதவும் உள்ளங்கள் மக்கள் நலச்சங்கம் செயலாளர் சுந்தரபாண்டியன், தலைவர் மாரிசெல்வம், நிர்வாககுழு உறுப்பினர் திருச்செல்வம், சுந்தரம், மாரியப்பன், முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
சுமார் 2மணி நேரம் செய்துங்கநல்லூர் ரயில்நிலையத்தில் கோட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.


