தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களைத் தனிநபர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக சார்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக சிறுபான்மை பிரிவு மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் பிதேலிஸ், மாநகராட்சி ஆணையருக்கு அளித்துள்ள மனுவில் குறிப்பிட்டுள்ள கோரிக்கைகள் வருமாறு: தூத்துக்குடி மாநகராட்சி 47-வது வார்டு, லயன்ஸ்டவுன் ரோச் காலனி 4-வது தெருவில் சிறுவர் பூங்கா அமைய வேண்டிய இடத்தில் தனிநபர்கள் ஆக்கிரமித்து கார் பார்க்கிங் மற்றும் மீன் நிறுவனம் அமைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.
ரோச் நகர் 2-வது தெருவில் எஸ்ஆர்எம் ஹோட்டல் நிர்வாகத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மாநகராட்சி இடத்தை உடனடியாக மீட்க வேண்டும். ரோச் காலனி 3-வது தெரு முதல் 6-வது தெரு வரை உள்ள 40 அடி அகலம் கொண்ட சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையைச் சீரமைக்க வேண்டும்.
ரோச் காலனி 2-வது தெருவில் உள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான இடத்தை மீட்டு, அங்குப் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒரு சமூக நலக்கூடம் அமைத்துத் தர வேண்டும். மாநகராட்சி எல்லைக்குள் அடையாளம் காணப்படாத மாநகராட்சிக்குச் சொந்தமான பிற இடங்களையும் முறையாக ஆய்வு செய்து, அவற்றை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கத் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


