தூத்துக்குடியில் நாளை துவங்க உள்ள தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் உடற்தகுதி தேர்வு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2025ம் ஆண்டிற்கான இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 09.11.2025 அன்று நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்று தகுதியானவர்களுக்கு, தூத்துக்குடி மாவட்டத்தில் உடற்தகுதி தேர்வு நாளை (27.01.2026) முதல் வருகின்ற 29.01.2026 வரை தூத்துக்குடி தருவை மைதானத்தில் வைத்து நடைபெறவுள்ளது.
இதில் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 890 ஆண் விண்ணப்பதாரர்கள் பங்கு பெற உள்ளனர். இதில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தலைமையில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் உட்பட போலீசார் மற்றும் காவல் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் உடற்தகுதி தகுதி தேர்வு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேற்படி நடைபெற உள்ள உடற்தகுதி தேர்வு சம்பந்தமாக காவல்துறையினர் மற்றும் காவல் அமைச்சுப் பணி அலுவலர்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் தலைமையில் மாவட்ட காவல் அலுவலக கூட்டரங்கில் வைத்து இன்று (26.01.2026) அறிவுரை கூட்டம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் அமைச்சுப் பணி அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்


