கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
தமிழகத்தின் தென் பழனி என்றழைக்கப்படும் கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரை கோவிலில் தைப்பூச திருவிழா வருகிற 23-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 6 மணிக்கு திருவனந்தல் பூஜை, விளா பூஜை மற்றும் காலசந்தி பூஜைகள் நடக்கிறது.
தொடர்ந்து அங்குள்ள கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு காலை 9 மணியளவில் கொடி மரத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டு கொடி மரத்திற்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறுகிறது.
முக்கிய விழாவான தேரோட்டம் அடுத்த மாதம் (பிப்.) 1-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை 5 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டு காலசந்தி பூஜைகள் நடைபெறும். காலை 6.30 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 7.30 மணியளவில் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
காலை 9.30 மணியளவில் திரளான பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று தேர் நிலையை வந்தடைந்த உடன் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணியளவில் கோவில் சீர்பாதம் தாங்கிகள் சார்பில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் இரவு 7 மணியளவில் ஒவ்வொரு சமுதாயம் சார்பில் மண்டகப்படி திருவிழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


