திருச்செந்தூருக்கு தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை தரும் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பிரதமருக்கு இந்து முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், பிரதமர் நரேந்திர மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ஸக், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஜனாதிபதி, துணைஐனாதிபதிமற்றும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
தென் தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிக தலம் திருச்செந்தூர். இதன் அருகில் பிரசித்திபெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில், தேரி குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில், செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோவில் மற்றும் ஏராளமான மக்களின் குல தெய்வ கோவில்கள் சுற்றி உள்ளன. மேலும் கலங்கரை விளக்கம், சுற்றுலா தளங்கள் உள்ளது. தற்போது இந்திய அரசு சார்பில் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம், உடன்குடி அனல் மின் நிலைய பணி, கப்பல் துறைமுகம் போன்ற பணிகள் நடந்து வருகிறது.
பல்வேறு வகையில் முக்கியத்துவம் பெற்று வரும் திருச்செந்தூர் ரயிலில் தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுக்கு ரூ.21 கோடி வருவாய் ஈட்டி வரும் திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் போதிய நடைமேடைகள், நிழற்குடைகள், மற்றும் குடி நீர் வசதிகள் இல்லை.
மேலும் தற்போது செல்லும் ரயில் மெயின் லைன் வழியாகச் செல்வதால் சென்னை செல்ல 14 மணி நேரமாகிறது. திருச்சி – மதுரை (சோர்டு லைன்) வழியாக இயக்கினால் 3½ மணி நேரம் மிச்சமாகும். எனவே, திருச்செந்தூர் ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கும், சென்னையில் இருந்து திருச்செந்தூருக்கு 24 பெட்டிகள் கொண்ட நேரடி ரயில் சேவை (விருத்தாச்சலம் – அரியலூர்) மார்க்கமாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்செந்தூர் ரயில் நிலையத்தை விரிவாக்கம் செய்யவேண்டும். இஸ்ரோ பணிகள் நடந்து வருவதால் விஞ்ஞானிகள் வந்து செல்ல வந்தே பாரத் ரயிலும், ஏழை எளிய மக்கள் பயன் பெற அந்தியோதயா ரயிலும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


