பொத்தகாலன்விளை புனித திருக்கல்யாண மாதா திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில், ஊர் வழியாக செல்லும் டாரஸ் லாரிகளை தடை செய்து வேறு வழியாக செல்ல உத்தரவிட கோரி சாத்தான்குளம் வட்டாட்சியர் ராஜேஸ்வரியிடம் விவசாயிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் செயல்படும் கல்குவாரியில் இருந்து ஏராளமான டாரஸ் லாரிகள் மணல் மற்றும் குண்டு கற்கள் ஏற்றுக் கொண்டு சாத்தான்குளம், முத்துகிருஷ்ணாபுரம், சுப்பிரமணியபுரம் விலக்கு, பொத்த காலன் விளை, மணிநகர், படுக்கபத்து வழியாக உடன்குடி பகுதியில் நடைபெறும் அனல்மின் நிலைய பணிகளுக்காக எடுத்து செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இந்த லாரிகள் அதிவேகமாக செல்வதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் சிரமம் அடைவதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் பொத்தக்காலன்விளையில் பிரசித்தி பெற்ற புனித திருக்கல்யாண மாதா திருவிழா வரும் 14ஆம் தேதி தொடராங்கி 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மேலும் திருவிழா தொடர்பாக 26 ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் இடம் பெற உள்ளது. இதனால் அதே ஊர் பகுதியில் திருவிழா தொடர்பாக ஊரில் சாலையோரம் தோரணங்கள் மற்றும் அலங்கார வளைவுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த நிலையில் டாரஸ் லாரிகள் அப்பகுதியில் சுமைகள் ஏற்றி செல்லும் போது விபத்துகள் நிகழ வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில்சாத்தான்குளம் தென் பகுதி விவசாய சங்க தலைவர் லூர்துமணி தலைமையில் பொத்தக்காலன் விளையை சேர்ந்த செல்வ ஜெகன், ஜஸ்டின் ஜெயராஜ், பெலிக்ஸ், அந்தோணி, வெலிங்டன், கஸ்பார். மற்றும் தமிழ்நாடு விவசாய சங்க மாநிலச் செயலாளர்பாலசுப்பிரமணியன், சொக்கலிங்கபுரம் சௌந்தர பாண்டியன், சாத்தான்குளம் வர்த்தக சங்கத் தலைவர் அப்பு கண்ணன், செயலர் செல்வராஜ்மதுரம், உள்ளிட்ட பலர் சாத்தான்குளம் வட்டாட்தியர் ராஜேஸ்வரியை, சந்தித்து மனு அளித்தனர்.
அந்த மனுவில், பொத்த காலன் விளை புனித திருக்கல்யாண மாதா திருவிழா வரும் 14ஆம் தேதி தொடங்க உள்ளதால் அப்பகுதியில் சுமை ஏற்றிவேகமாக செல்லும் டாரஸ் லாரிகளால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் இந்த லாரிகளை வரும் 14ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை வேறு மார்க்கமாக சுமைகளை ஏற்றி செல்ல உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டிருந்தனர். மனுவை பெற்றவட்டாட்சியர் , நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக உறுதி அளித்தார்.


