தூத்துக்குடி மாவட்டத்தில் பயோமெட்ரிக் மிஷினில் கைவிரல் ரேகை பதிவை ஏற்காததால் முதியவர்கள் பொங்கல் தொகுப்பு கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசு சார்பில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் குடும்பங்களுக்கும், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு பொருட்களுடன் தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்தொகையும் நேற்று ஜனவரி 8ந் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தில் பொங்கல் தொகுப்பு வாங்க வந்த குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முதியோர்களில் சிலரது கைரேகையை பயோமெட்ரிக் மிஷின் ஏற்காததால், பொங்கல் தொகுப்பு கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து “முதல்வர் தாயுமானவர்” திட்டத்தில் கைரேகை அல்லது கண் கருவிழி சரிபார்ப்பு சாத்தியமில்லாத நிலையில், கையொப்பம் பெற்று பொருட்களை வழங்கி வருகிறது போல, பயோமெட்ரிக் மிஷினில் கைரேகை ஏற்காத குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முதியோர்களுக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்க மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்


