தூத்துக்குடியில் மாநகராட்சி படிப்பகத்தில் படித்து அரசு பணிக்கு தேர்வான 10பேருக்கு மேயர் ஜெகன் வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி பாளை ரோடு தமிழ்ச்சாலை பகுதியில் அமைந்துள்ள பூங்காவில், டி.என்.பி.எஸ்.சி. வங்கி, ரெயில்வே போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், இயற்கை சூழலில் அமர்ந்து படிக்கும் வகையிலும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள், நாளிதழ்கள், இருக்கை வசதி, மின் வசதி, Wi-Fi, குடிநீர் வசதி மற்றும் கழிவறை போன்ற அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் படிப்பக வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தூத்துக்குடி மாநகர பகுதியைச் சார்ந்த இளைஞர்கள் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகளில் பங்கு பெற்று வெற்றி பெறுவதற்கு உந்து சக்தியாக இப்படிப்பகம் விளங்கி வருகிறது. இதுபோல் சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளி வளாகத்தின் பின்புறம் கணினி வசதியுடன் படிப்பகம் அமைக்கப்பட்டது. இப்படிப்பகத்தில் தினமும் சுமார் 300 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மாநகராட்சி படிப்பகத்தில் படித்த 10 பேர் குரூப் 4 தேர்வு எழுதப்பட்டு தேர்ச்சி பெற்று அரசு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 10 பேரையும் மேயர் ஜெகன் மாநகராட்சி அலுவலகத்திற்கு அழைத்து மாநகராட்சி ஆணையர் பிரியங்கா முன்னிலையில் பாராட்டினார்.
இதுகுறித்து மேயர் கூறுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சிவந்தாகுளம் மேல் நிலை பள்ளியில் நூலகம் மற்றும் அறிவு சார் மையமானது செயல்பட்டு வருகின்றது இந்த மையத்தில் பயின்ற 10 பேர் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் நடத்திய குருப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள்.
அவர்கள் வாழ்வில் பல வெற்றிகள் அடைய வாழ்த்தினேன் மேலும் அங்கு படித்து கொண்டு இருக்கின்ற மாணவர்களுக்கு ஒரு உதாரணமாய் இருந்துள்ளாகள் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன் என்றார்.


