தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரியும், ஆற்றங்கரையில் உள்ள மண்டபங்களை பாதுகாக்க கோரியும் கடந்த 2018 ஆம் ஆண்டு எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கினை தொடர்ந்து மதுரை உயர்நீதி மன்ற நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமி நாதன், புகழேந்தி அமர்வு விசாரித்து வந்தது. அவர்கள் கடந்த 11.03.2024 அன்று தீர்ப்பு வழங்கினார்கள். உள்ளாட்சித் துறையினர் தாமிரபரணியில் சாக்கடை கலக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டபங்கள் படித்துறைகளை இந்து அறநிலையத்துறை சீரமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என உத்தரவு பிறபித்தனர். ஆனால் இந்த உத்தரவினை யாரும் நடைமுறைப்படுத்த வில்லை.
இதை தொடர்ந்து கடந்த 10.11.2024 அன்று நீதியரசர்கள் ஜி.ஆர்.சுவாமிநாதன் புகழேந்தி ஆகியோர் தாமிரபரணியில் நேரில் வந்து சாக்கடை கலக்கும் இடங்கள் மற்றும் படித்துறைகளை ஆய்வு செய்தனர். அதை தொடர்ந்தும் பல உத்தரவு பிரபித்து நடவடிக்கை இல்லை.
எனவே 02.01.2025 அன்று நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் மேலும் ஒரு ஆணையை பிரப்பித்தனர்.
அதன்படி இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளை பிரபித்தும் ஆற்றில் கலக்கும் சாக்கடையை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை. நாங்கள் நேரில் வந்து ஆய்வு செய்தும் கழிவுகளை தடுக்க நடவடிக்கை இல்லை.
எனவே தாமிரபரணி ஆற்றின் மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளோம். மாவட்ட நிர்வாகம், நீர்வளத் துறை, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மாநில அரசு ஆகியவற்றை ஈடுபடுத்தினோம். ஆனாலும் அவர்கள் நடவடிக்கை எடுக்க இல்லை. எனவே ராஜஸ்தானில் வறண்டு போன ஓடைகளையும் ஆறுகளையும் மீட்டெடுத்து மகசேசே விருது பெற்ற நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங்கை இந்த பணிக்கு ஆணையராக நியமிக்கிறோம். அவர் நேரில் சென்று களப்பணி மற்றும் ஆய்வு செய்து திட்டங்கள் செயல்பட தேவையான விலைப்பட்டியலை சமர்பிப்பார் என உத்தரவு பிரப்பித்தனர்.
இந்த நிலையில் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் நீர் பாதுகாப்பு நிபுணர் ராஜேந்திர சிங் இன்றைய தினம் நேரடியாக ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தார். முதற்கட்டமாக திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் கழிவு நீர் அனைத்தும் ஒரே இடத்தில் சுத்திகரிக்க அமைக்கப்பட்டுள்ள ராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து கழிவுநீரால் பாதிக்கப்படும் பகுதிகள் குளங்கள் வாய்க்கால்களை நேரில் பார்வையிட்டார். அதன் பின்னர் திருநெல்வேலி நகரத்திற்குள் தாமிரபரணி பாய்ந்து ஓடும் பகுதிகளில் சிந்து பூந்துறை பகுதியில் கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடங்களை ஆய்வு செய்த அவர் அங்கிருந்த பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து நெல்லை நகரப் பகுதிகளில் சிந்து பூந்துறை, ஸ்ரீபுரம், பகுதிகளில் ஆய்வு மேற்க உள்ளார். தொடர்ந்து இரண்டு தினங்கள் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணியில் சாக்கடை கழிவுநீர் கலக்கும் இடங்களை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்ய உள்ளார்.
அதை தொடர்ந்து தாமிரபரணியை பாதுகாப்பதற்கு குறித்து உரிய திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
அவருடன் உதவியாளர் பாலாஜி, முத்தாலங்குறிச்சி காமராசு, மொழிபெயர்ப்பாளர்கள் வினோத், இளங்கோ, ராமையன்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் டேவிட், சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார், நம்தாமிரபரணி நல்லபெருமாள், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு தாமிரபரணி பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்தனர்.


