தூத்துக்குடி மாவட்டத்தில் வருகிற 27ஆம் தேதி 3 மையங்களில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக உதவிப் பேராசிரியர் தேர்வு நடைபெறவுள்ளஉள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக நடைபெறவுள்ள உதவிப்பேராசிரியர் தேர்வு எதிர்வரும் 27.12.2025 அன்று மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ளது. அதன் அடிப்படையில் நமது தூத்துக்குடி மாவட்டத்தில் 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 722 நபர்கள் தேர்வு எழுதவுள்ளார்கள்.
இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் க.இளம்பகவத், தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் மற்றும் காவல்துறை, மின்சார துறை, வருவாய் துறை, போக்குவரத்துத்துறை, தீயணைப்பு துறை, மருத்துவதுறை ஆகிய துறை அலுவலர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. அனைத்து மையங்களிலும், போதுமான காவல் துறை வசதியும், மின்சார வசதியும், தேர்வர்கள் சென்று தேர்வு எழுதுவதற்கு போக்குவரத்து சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக முன்னதாகவே முதன்மைக்கல்வி கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர் ஆகிய அனைத்து நிலை அலுவலர்களுக்கும் தனித் தனியாக கூட்டம் நடத்தப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாக கூறப்பட்டுள்ள அனைத்து விதிமுறைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் உள்ள தேர்வு அறைகள் தனித்தனியாக CCTV வசதியுடனும், குடிநீர் வசதியுடனும், மின்சார வசதியுடனும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
தேர்வானது முற்பகல் பிற்பகல் என இருவேளைகளிலும் நடைபெறுவதால் அனைத்து தேர்வர்களும் முற்பகல் தேர்விற்கு காலை 8.30 மணிக்கும் பிற்பகல் தேர்விற்கு மதியம் 2.00 மணிக்கும் தேர்வு மையங்களுக்கு வருகை புரிய வேண்டும். காலை 9.00 மணிக்கு மேல் மதியம் 2.30 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் எக்காரணம் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
தேர்வு எழுதுவதற்கு தேர்வுக்கூட நுழைவு சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டை (AADHAR CARD, PAN CARD, DRIVING LICENCE, PASS PORT ஏதேனும் ஒன்று) கருப்பு பந்து மை பேனா 2 ஆகியவை மட்டுமே கொண்டு வர கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தவிர வேறு எந்த ஒரு எலக்ட்ரானிக் பொருட்களோ, கைப்பேசி போன்ற மற்ற பொருள்களோ அனுமதிக்க இயலாது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத், தெரிவித்துள்ளார்.


