தூத்துக்குடியில் கொசுமருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாநகராட்சி ஊழியரை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி போல்டன்புரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் ஜேசு அந்தோணி மகன் இன்பராஜ் (42). இவர் மாநகராட்சியில் டெங்கு களப்பிரிவில் கொசுமருந்து தெளிக்கும் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு 8 மணியளவில் அழகேசபுரம் மெயின் ரோட்டில் கொசுமருந்து தெளிக்கும் வாகனம் மூலம் பணியில் ஈடுப்பட்டிருந்தார்.
அப்போது அந்த சாலையில் வந்த கார், கொசு மருந்து தெளிக்கும் வாகனத்தின் மீது மோதியது. இதனை தட்டிக் கேட்டதால் காரில் வந்த நபர் இன்பராஜை ஆபாசமாக திட்டி தாக்கினாராம். இதில் காயம் அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


