நாசரேத் சேகர மன்றம் சார்பில் நடைபெற்ற மர்காஷிஸ் தின விழாவில் நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
“நாசரேத்தின் தந்தை” எனப்படும் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் தனது 24 வயதில் கிறிஸ்தவ மிஷனரியாக 1876 ஆம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நாசரேத்திற்கு வந்தார். அவர் 1908 ஆம் ஆண்டு வரை நாசரேத்தில் மிஷனரி பணி செய்தார். அப்போது நாசரேத்தில் பாடசாலைகள், தபால் மற்றும் ரயில் நிலையம், தொழிற் பயிற்சி பள்ளி, மருத்துவமனை, கிறிஸ்தவ தேவாலயம் போன்ற பல பணிகளை நிறைவேற்றியுள்ளார்.
கனோன் ஆர்தர் மர்காஷிஸ் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் மண்ணில் கால்பதித்த தினமான டிசம்பர் 1ந் தேதி மர்காஷிஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. நாசரேத்தில் மர்காஷிஸ் தினத்தையொட்டி தூய யோவான் பேராலய சபா மண்டத்தில் வைத்து நடைபெற்ற விழாவிற்கு ஆரம்பமாக நாசரேத் பேராலய தலைமை குருவானவர் ஹென்றி ஜீவானந்தம் தலைமை தாங்கி ஜெபம் செய்தார்.
உதவி குருவானவர் தனசேகர் ராஜா, சேகர செயலர் ராஜாசிங் சாலமோன், பொருளாளர் லேவி அசோக் சுந்தர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓய்வுபெற்ற ஆசிரியர் ஸ்டீபன் லூயிஸ் கனோன் ஆர்தர் மர்காஷிஸ் ஐயரின் அருட்பணிகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு தையல் இயந்திரம், கிரைண்டர் ஆகிய உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நாசரேத் சேகரத்தில் உள்ள ஸ்தானங்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் பேராலய சபை ஊழியர்கள் ஜெபராஜ், ஜெசு செல்வன் மற்றும் சேகர மற்ற உறுப்பினர்கள், சபை மக்கள், திரளாக கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை தூய யோவான் பேராலய சேகர மன்றத்தினர் செய்திருந்தனர்.


