இன்றைய நமது மனித சமூகத்தின் அதீத வளர்ச்சிக்கு நெறிபடுத்தப்பட்ட நவீனக் கல்விதான் முதன்மையான காரணம். அக்கல்வியும்கூட அனைவரும் கட்டாயமாக பயின்றே ஆகவேண்டும் என்ற நிலைக்கு வந்த பிறகுதான் அனைத்து தரப்பினரும் கல்வியின் அவசியத்தை உணர்ந்து வருகின்றனர்.
ஒவ்வொருவரும் வாழ்கைக்கான இலட்சியம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதனை அடையும் முயற்சியில் மணவர்களைப் பயணிக்க வைக்கும் போது மட்டுமே அதன் முழுமையை அவர்களால் அடையமுடியும்.
நோக்கமற்ற கற்றல்
இன்று பள்ளிகளில் சில வளரிளம் பருவத்தினரின் நடத்தைமாற்றங்கள் ஆசிரியர்களால் எளிதில் சீரமைக்க முடியாத அளவில் இருப்பதைக் காண முடிகிறது. சாதி,சமய, பொருளாதார ரீதியிலான காட்புணர்ச்சியினால் மாணவர்களுக்கிடையே ஏற்படும் விரும்பதகாத செயல்கள் அதிகரித்து வருகிறது.
இதற்கு மிகமுக்கிய காரணம் பெரும்பாலான மாணவர்கள் எவ்வித நோக்கமுமின்றி தங்களது பருவத்தைக் கடப்பதுதான்;
கல்விக் கற்றலை வாழ்வின் ஒரு பகுதியாக மட்டுமே கருதுவதுதான்.
இத்தகைய அவர்களது மனப்போக்கு ,எதற்கு கற்கிறோம் என்பதை அறியாமலேயே, “பள்ளிக்குச் சென்று வருவது வாழ்க்கையில் எல்லோருக்கும் விதிக்கப்பட்ட ஒரு கட்டாய கடமை” என்று நினைக்கிறார்கள்.
எனவே தங்கள் மகிழ்ச்சியான இளமைப் பருவத்தின் பெரும்பகுதியை வகுப்பறை , பள்ளி வளாகம், விளையாட்டு மைதானம்…என்று மிகச் சிறிய எல்லைக்குள் தாங்கள் முடங்கி கிடப்பதாக எண்ணுகிறார்கள். பாடம் படித்தல், எழுதுதல் என்று ஆசிரியர்களின் அன்றாட பணித்தலுக்குள் சோர்வடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விடுகின்றனர்.
எந்த ஒரு செயலும் திரும்ப திரும்ப எவ்வித நோக்கமும் இன்றி செய்யப்பட தூண்டும் போது மனித மனம் அதில் சலிப்படைவது இயல்பான காரியம் தான். இன்றைய பெரும்பாலான மாணாக்கர்களின் நிலமை இதுவாகத்தான் இருக்கிறது.
ஒருசில மாணாக்கர்கள் மட்டுமே இதற்கு விதிவிலக்காக ஆர்வத்தோடு கற்றலில் ஈடுபடுகின்றனர்.அந்த ஆர்வத்திற்குக் காரணம் அவர்களது ஏதோவொரு இலக்கு தான் என்பதை அறியமுடியும்.
அந்த இலக்கும் சில வேளைகளில் கற்றலில் அவர்களது சிறு சிறு வெற்றிகளினால் கிடைக்கும் மகிழ்ச்சியாக கூட இருக்கலாம். இவ்வாறு ஏதோவொரு இலக்கும் அதனால் கிடைக்கும் ஊக்குவிப்புமே அவர்களைக் கற்றலில் தொடர்ந்து ஈடுபட வைக்கிறது.
பொதுவாக குழந்தைகளின் இம்மனப்பான்மையை அவர்களது வாழ்க்கைக்கான சரியான இலட்சியத்தை ஏற்படுத்தி அவர்களை அடையவைத்துவிட முடியும்.
இலட்சிய பாதை
*****”*
இலட்சியத்தை அடைவதற்கான பாதையை ஏற்படுத்தி விட்டால் அவர்களை அறியாமலேயே அதை அடைவதற்கான செயலில் ஈடுபட ஆரம்பித்து விடுவார்கள். இது ஓர் உளவியல் உண்மை. இதைத் தான் உளவியலாளர்கள் இலட்சியம் என்ற ஒன்றை ஏற்படுத்தி அவர்கள் மனத்தின் மையத்தில் வைத்து விட்டால் போதும் அதுவே அவர்களை தன்னை அடைவதற்கான முழு ஆற்றலையும் அளித்து வழிநடத்திவிடும் என்று கூறுகின்றனர்.
கல்வியினால் வெறும் மதிப்பெண்களைப் பெறுவதே இலக்காக கொண்டு பயிலும் மாணவர்களும்,அதனையே ஊக்குவிக்கும் பெற்றோரும், ஆசிரியர்களும் தான் பெருகி வருகிறார்கள். அதில் கிடைக்கும் சிற்சில மகிழ்ச்சியை மட்டுமே கற்றலின் பயனாக எடுத்துக் கொள்கிறார்கள்.அது தற்காலிக மகிழ்ச்சியும், நிறைவும் தான் என்பதை அறியாமல் போய்விடுகிறார்கள்.
மதிப்பெண்களை மட்டுமே இலக்காகக் கொண்டு பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவனுக்கு அடுத்து என்ன படிக்க வேண்டும் என்ற தெளிவற்று, தடுமாறி நிற்கிறான். எனவே அந்தச் சூழலில் கிடைக்கும் ஏதோவொரு மேல்படிப்பில் சேர்ந்து விரும்பாமலேயே படித்து முடித்து ஏதோவொரு வேலையில் அமர்ந்து வேண்டா வெறுப்போடு கழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதனால் தனிமனித வாழ்க்கை மட்டுமின்றி அவனது வெறுப்பின் பிரதிபலிப்பு படிப்படியாக சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது உண்மை.
கல்வியின் முக்கிய நோக்கங்களுள் ஒன்று இலட்சியத்தை ஏற்படுத்துவது தான்.
தத்துவஞானி பிளாட்டோ கூறுகிறார், பிறவித் திறமையை வளர்ப்பதற்காகவே கல்வியறிவு பயன்பட வேண்டும் என்று.
நாம் “அனைவருக்கும் கல்வி”என்ற இலக்கை நோக்கிப் பயணிக்கும் அதே வேளையில் அந்த அனைவருமே வாழ்க்கைக்கு மிக அவசியமான இலட்சியம் ஒன்றினை ஏற்படுத்தி
அதனை அடைய செய்தலை முதன்மையான நோக்கமாகவும் கொள்ள வேண்டும்.
எவ்வாறு ஏற்படுத்துவது?
*****”*****
இலட்சியத்தின் முக்கியத்துவத்தை அறிந்து வாழ்வில் அதன் பாதையில் பயணிப்பவர்களும், அதை அடைந்தவர்களும் மற்றவர்களுக்குள் ஏற்படுத்துவதில் ஆர்வம் காட்டினால் இந்நிலையை மாற்றி அமைக்கலாம்.
இலட்சியத்தை எப்படி ஏற்படுத்துவது?மிக மிக எளிதான இச்செயலைப்பற்றின விழிப்புநிலை மக்களுக்கு அவசியம் தேவை.
சமூகத்தின் அடிப்படை அலகான குடும்பங்களில் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு இலட்சியம் என்ற வாழ்க்கையின் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்து விட்டால் போதும்.அவர்களது வாழ்க்கை வீணாகாமல் முழுமையான வாழ்க்கையை வெற்றிகரமாக, தனக்கும், சமூகத்திற்கும் பயனுள்ள விதத்தில் வாழ்வதற்கு வழி வகுத்துவிடலாம்.
குழந்தைப் பருவம்
********
குழந்தைப் பருவத்திலேயே ஏற்படுத்தப்படும் இலட்சிய உணர்வு அதிக வலிமையானது; எதனாலும் தகர்க்கப்பட முடியாதது. எந்த ஒரு விசயமும் பழக்கமாகி விட்டால் பிறகு அவர்களே மாற்ற நினைத்தாலும் அதை மாற்றிக் கொள்வது கடினம்.
குழந்தைகள் கல்விக் கூடங்களுக்கு அனுப்பபடும் முன்பே இந்த இலட்சியம் என்ற வீரியமிக்கச் சொல்லை அதன் பொருளோடு அறிமுகம் செய்துவிட வேண்டியது பெற்றோர்களின் கடமை என்பதை உணர்ந்து விட்டாலே… தொடங்கிவிடும் இந்த இலட்சிய வேட்கை.
இன்றைய காலகட்டத்தில் நவீன அலைபேசிகள் குழந்தைகளின் முதன்மையான பொழுதுபோக்குச் சாதனமாக இருந்துவருகிறது. அவர்கள் விரும்பும் அந்த அலைபேசியின் வாயிலாகவே எண்ணற்ற சிறந்த உதாரணங்களையும், இலட்சியங்களைக் குறித்த சிறந்த முன் மாதிரிகளையும் காண்பித்து ஆர்வத்தை எளிதாகத் தூண்டிவிட முடியும்.
பெற்றோர்கள் அதற்கென்று நேரத்தை ஒதுக்கி, குழந்தைகளுக்குள் இலட்சியத்தைப் புகுத்தி விட்டால் எளிதில் உள்ளத்தில் பதித்துக் கொள்வர். அது நல்ல விளைநிலத்தில் விழுந்த விதையாக ஏற்ற காலகட்டத்தில் வேர்விடத் தொடங்கி விடும். பிறகு அவர்களைக் குறித்து கவலைப்பட வேண்டியது வராது.
அதன்பிறகு படிக்கச் சொல்லித் தொந்தரவு செய்ய வேண்டியநிலை பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படாது.
இலட்சியம் என்ற வீரியம் மிகுந்த ஆற்றலானது, அந்த இலட்சியத்தை அடைவதற்கு கல்வியும், விடா முயற்சியும் தேவை என்பதை அவர்களது உள்ளுணர்வைத் தூண்டி கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கும்.அவர்கள் தங்களது வெற்றி இலக்கை அடையும்வரை உடனிருந்து உந்தித் தள்ளும்.


