தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய நுழைவாயிலை திறக்க வேண்டும் என்று இந்திய விமான பயணிகள் சங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்பவர் சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய டெர்மினலின் நுழைவாயில் அடைக்கப்பட்டிருப்பதாக அறிகிறோம். இதனால் தென் மாவட்டங்களில் இருந்து குறிப்பாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இருந்து வரக்கூடிய விமானப் பயணிகள் வாகைக்குளம் டோல் பிளாசாவில் பணம் செலுத்தி அதன் பின்னர் பழைய ஏர்போர்ட் நுழைவாயில் வழியாகத்தான் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல். ஏர்போர்ட் நிர்வாகிகள் இந்த நுழைவாயிலை திறக்கக் கூடாது என்று NHAI சொல்லியதாக கூறுகிறார்கள். இது உடனடியாக தீர்க்கப்பட வேண்டிய விஷயம். ஏனென்றால் இரு அமைப்புகளுமே – விமான நிலையம் மற்றும் NHAI இரண்டுமே மத்திய அரசினுடைய பொதுத்துறை நிறுவனங்கள் தான். மக்களுக்காகத்தான் இந்த நிறுவனங்கள் செயல்பட வேண்டுமே ஒழிய பணத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படக் கூடாது.
ஆகவே, உடனடியாக மத்திய அரசும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர்,மாவட்ட ஆட்சியர் இது குறித்து இரண்டு துறைகளையும் அழைத்து நேரிலே பேசி உடனடியாக புதிய நுழைவாயிலை தூத்துக்குடி விமான நிலையத்தில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


