தூத்துக்குடியில் நடைபெற்ற பசுமைப் பயண மிதிவண்டி பேரணியை ஆயர் ஸ்டீபன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்
தமிழக துறவியர் பேரவை, அய்கஃப் கல்லூரி மாணவர் இயக்கம் மற்றும் தோழமை இயக்கங்கள் இணைந்து குமரி முதல் சென்னை வரையிலான மாபெரும் பசுமைப் பயண மிதிவண்டி பேரணி தூத்துக்குடியில் பனிமய மாதா ஆலயம் முன்பு தொடங்கியது.
நிகழ்ச்சியில் மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையேற்று கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். தமிழகத் துறவியர் பேரவையின் தலைவர் அருள்சகோதரி மரிய பிலோமி இப்பேரணியின் நோக்கம் குறித்து பேசினார். தூத்துக்குடி மறைமாவட்ட துறவியர் பேரவையின் பொருளாளர் அருள் சகோதரர் அன்பு சுற்றுச்சூழல் சாக்க வாசித்த உறுதிமொழியை அனைவரும் மீண்டும் கூறி உறுதிமொழி ஏற்றனர்.
வீராங்கனை அமைப்பின் பேராசிரியை பாத்திமா பாபு நிறைவுரை நிகழ்த்தினார். புனித தோமையார் பதின்ம பள்ளி மாணவர்கள் இசை வாத்தியம் முழங்க மிதிவண்டி பேரணி வீரர்களை வரவேற்றனர். அருள்திரு. ஜெயந்தனின் வழிகாட்டுதலில், புனித தோமையார் கல்வியியல் கல்லூரி மாணவிகள் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு பாடல்களைப் பாடினர்.
மிதிவண்டி பேரணியினர் மரங்களை வெட்டக்கூடாது என்ற கருத்தில் வீதி நாடகத்தை அரங்கேற்றினர். அது பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றது. பசுமைப் பயண மிதிவண்டி பேரணி பனிமய மாதா கோவில் முன்பிருந்து புறப்பட்டு ஜார்ஜ் சாலை, தெற்கு காட்டன் சாலை, மேற்கு காட்டன் சாலை, கடற்கரைச் சாலை, மரியன்னை கல்லூரி, பூபாலராயர் புரம், இஞ்ஞாசியார் புரம் மற்றும் மாப்பிள்ளையூரணி விலக்கு வழியாக சாத்தூரை நோக்கிச் சென்றது.
பேரணியில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி, அன்னம்மாள் கல்வியியல் கல்லூரி, புதுக்கிராமம் திருச்சிலுவை மனையியல் கல்லூரி, புனித தாமஸ் கல்வியியல் கல்லூரி மாணாக்கர் சுற்றுச் சூழல் விழிப்புணர்வுப் பதாகை ஏந்தி கலந்து கொண்டனர். தூத்துக்குடி சாலைகளின் இருபுறமும் நகரப் பள்ளி மாணவ – மாணவியர் பச்சை நிறக் கொடியை அசைத்து வரவேற்றனர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதியாகத் தூய மரியன்னை கல்லூரி மாணவிகள் காலைப் பொழுதில் முத்து நகர் கடற்கரையைத் தூய்மை செய்தனர். 1500 விதைப் பந்துகளும், 1000 மஞ்சள் பைகளும், 500 மரக்கன்றுகளும், 500 விதை பாக்கெட்டுகளும் மக்களுக்கு வழங்கப்பட்டன.
செயின்ட் தாமஸ் கல்வியியல் கல்லூரி மாணவிகள் சுற்றுச்சூழல் குறித்துப் பாடல்களைப் பாடினர். மிதிவண்டி பேரணி வீரர்களிடம் தூத்துக்குடியின் சுற்றுச் சூழலை மேம்படுத்த கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இம்மனு நிறைவு நாளில் சென்னையில் தமிழக முதல்வரிடம் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், இளையோர் இயக்கத்தினர், அமலோற்பவ மாதா மதுவிலக்கு சபையினர், வின்செந்தியன்கள், கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கத்தினர், அருள்பணியாளர்கள், அருள்சகோதரிகள், மறைமாவட்டப் பணிக்குழுக்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மீனவர்கள், வணிகப் பெருமக்கள், பல்வேறு பள்ளிகளின் நிர்வாகிகளென ஐநூறுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இன்றைய நாளில் பேரணி சென்ற பாதை எங்கும் பச்சை நிறக் கொடி பறந்தது.
முன்னதாக தூத்துக்குடி மாவட்ட துறவியர் பேரவைத் தலைவரும் புனித பிரான்சிஸ் சவேரியார் மேனிலைப் பள்ளியின் அதிபருமான அருள்திரு. மரிய சிங்கராயர் சே.ச. வரவேற்புரை வழங்கினார். துறவியர் பேரவையின் துணைத் தலைவரும் தூய மரியன்னை கல்லூரியின் முதல்வருமான அருள்சகோதரி ஜெஸ்ஸி நன்றியுரை கூறினார். நிகழ்வைத் தமிழ்ச் செம்மல் நெய்தல் அண்டோ தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டைத் தூத்துக்குடி மறைமாவட்ட துறவியர் பேரவையினர், தோழமை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு இயக்கத்தினர் இணைந்து செய்திருந்தனர்.


