கோவில்பட்டியில் அந்தியோதயா ரயில் முன் பாய்ந்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வேலாயுதபுரம் மேம்பாலம், கேபிகே சாமி படிப்பகம், வள்ளிமுத்து பள்ளி பின்புறம் செல்லும் தண்டவாளப் பாதையில் நாகர்கோவிலில் இருந்து தாம்பரம் வரை செல்லும் அந்தியோதயா ரயில் முன் விழுந்து வாலிபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரயில் வண்டியின் கார்டு கோவில்பட்டி ரயில் அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து இருப்பு பாதை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பெருமாள் சம்பவ இடம் சென்று உடலை மீட்டு விசாரணை நடத்தினார். இறந்தவருக்கு சுமார 25 வயது இருக்கும், அவர் யார்? எதற்காக தற்கொலை செய்தார் என்பது தெரியவில்லை. அவரிடம் அடையாள அட்டைகள் மற்றும் உடைமைகள் எதுவும் காணப்படவில்லை. இதுகுறித்து இலுப்பையூரணி கிராம நிர்வாக அலுவலர் போத்திராஜ் கொடுத்த புகாரின் பேரில் தூத்துக்குடி ரயில்வே காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.


