கோவில்பட்டி, திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதியில் விடிய விடிய சாரல்மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக அக்.21-ம் தேதியில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பகல் முழுவதும் கடும் பனிமூட்டமாக காணப்பட்டது. இதனால் சாலைகளில் போதிய வெளிச்சம் இல்லாததால் எதிரே வரும் ஆட்கள் மற்றும் வாகனங்கள் தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடியும், அதிக ஒலி எழுப்பியவாறும் சென்றனர். தொடர்ந்து இரவு 10 மணி முதல் கோவில்பட்டி பகுதியில் மழை பெய்ய தொடங்கியது.
இரவு முதல் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இந்த மழை நேற்று பகல் முழுவதும் நீடித்தது. நேற்று விடுமுறை தினம் என்பதாலும், பண்டிகை தினத்துக்கு மறுநாள் என்பதாலும் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. விட்டு விட்டு சாரல் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சாலைகள், தெருக்களில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது.
திருச்செந்தூரில் கடந்த சில நாட்களாக மழை பெய்துவருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் இரவு விடியவிடிய பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து நேற்றுகாலை முதல் இரவு வரை விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் வாரச்சந்தை உள்பட தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
சாயர்புரம் வட்டார பகுதியில் கடும் வறட்சி நிலவியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை பரவலாக சாரல் மழை பெய்தது. இதனால் கட்டாலங்குளம், நட்டாத்தி, திருப்பணி செட்டிகுளம், கோவங்காடு, மஞ்சள் நீர்காயல், சேர்வைக்காரன்மடம், கூட்டாம்புளி, குலையன்கரிசல், பேய்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்மாய்கள், ஊருணிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
இது இப்பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதேபோன்று, எட்டயபுரம், விளாத்திகுளம், ஆறுமுகநேரி, ஆத்தூர், தென்திருப்பேரை, குரும்பூர், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், ஏரல், நாசரேத், சாத்தான்குளம் பகுதியிலும் பரவலாக மழை பெய்தது.


