குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவின் 2வது நாளான நேற்று இரவு கற்பக விருட்ச வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் பிரசித்திபெற்ற ஞானமூர்த்தீஸ்வரர் உடனுறை முத்தாரம்மன் கோவில் உள்ளது. இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு நடைபெறும் தசரா திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு தசரா திருவிழா நேற்று முன்தினம் காலையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முதல்நாள் திருவிழாவான நேற்று முன்தினம் இரவில் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 2ம் நாள் திருவிழாவான நேற்று இரவில் முத்தாரம்மன் கற்பக விருட்ச வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
இன்று (வியாழக்கிழமை) இரவில் முத்தாரம்மன் ரிசப வாகனத்தில் (பார்வதி திருக்கோலம்) வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. வருகிற 2-ந் தேதி இரவு 11 மணிக்கு அன்னை முத்தாரம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடக்கிறது. நள்ளிரவு 12 மணிக்கு அன்னை சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளி லட்சகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மகிஷாசுரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.


